மதகுபட்டி அருகே வெண்சேலை உடுத்தி தொழு முன் பொங்கலிட்ட பெண்கள் கரும்பு ஒன்று ரூ.20,000க்கு ஏலம் போனது
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மேலத்தெருவில் மாட்டு பொங்கலை முன்னிட்டு மாட்டு தொழு முன் பொங்கலிட்டு வழிபட்டனர்.
மதகுபட்டி அருகே உள்ள மேலத்தெரு கிராமத்தில் முத்தரையர் சமுதாயத்தினர் குடும்பமாக வசிக்கின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் தை 2ம் தேதி மாட்டு பொங்கலன்று பச்சை நாச்சியம்மன், சூலபிடாரியம்மனுக்கு விரதம் துவக்கி, தொழு முன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவர்.
அந்த வகையில் நேற்று மாட்டு பொங்கலை முன்னிட்டு, ஒரு வாரத்திற்கு முன்பே பெண்கள் விரதத்தை துவக்கினர். விரத காலங்களில் வீட்டில் உணவுகளை தாழிக்க மாட்டார்கள்.
அதே போன்று வெண் சேலை உடுத்தி, பொன் நகைகள் அணியாமல் விரதத்தை கடுமையாக மேற்கொள்வார்கள்.
விரத காலங்களில் அசைவ உணவுகள் வாசனையே மேலத்தெரு கிராமத்தில் இருக்காது. நேற்று காலை 8:00 மணிக்கு வெண்சேலை உடுத்திய 35 பெண்கள் பொங்கல் பானையை ஊர்வலமாக எடுத்து வந்து, தொழு முன் வெண் பொங்கலிட்டு பச்சை நாச்சியம்மன், சூலபிடாரி அம்மனுக்கு வழிபாடு நடத்தினர்.
இதன் மூலம் உழவுக்கு கைகொடுக்கும் கால்நடைகளுக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த விழாவை நடத்தினர்.
கரும்பு ஒன்று ரூ.20,000க்கு ஏலம் இக்கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய கரும்பு, எலுமிச்சம் பழங்களை ஏலம் விடுவார்கள். அந்த வகையில் நேற்று மாலை 4:00 மணிக்கு கோயிலுக்கு நேர்த்திக்கடனாக வந்த 240 கரும்புகளை ஏலம் விட்டனர். முதலில் விடப்பட்ட கரும்பை மலைச்சாமி என்பவர் ரூ.20 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்.
அதனை தொடர்ந்து ஒவ்வொரு கரும்பும் ரூ.10 ஆயிரம் வரை ஏலம் போனது. இன்று கோயிலுக்கு வந்த எலுமிச்சம் பழத்தை ஏலம் விடுவார்கள்.
இக்கோயிலுக்கு வரும் கரும்பு, எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுப்பவர்களுக்கு திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் போட்டி போட்டு கொண்டு கரும்பு, எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுப்பார்கள்.
விழா ஏற்பாட்டை மேலத்தெரு கிராம மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.
மேலும்
-
சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன்; வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ நம்பிக்கை
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்