செங்கை ரயில் நிலையம் திறப்பது எப்போது?

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலைய பணியை விரைவாக முடிக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

செங்கல்பட்டு ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இதன் வழியாக, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு விரைவு ரயில் சென்று வருகின்றன.

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மற்றும் அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சார ரயில் சென்று வருகின்றன.

இந்த ரயில் நிலையத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், அத்தியாவசிய பணிகள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் சென்று வருகின்றனர்.

இதனால், ரயில் நிலையத்தை மறு சீரமைப்பு பணி மேற்கொள்ள அம்ரித் பாரத் திட்டத்தில், 22.14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது.

இப்பணியை பிரதமர் மோடி, கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி துவக்கி வைத்தார்.

இப்பணியை 150 நாட்களில் முடிக்க வேண்டும் என, ஒப்பந்ததாரர்களுக்கு, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

இத்திட்டத்தில், ரயில் நிலைய நுழைவாயில் மேம்படுத்துவது, பயணியர் காத்திருப்பு அறைகள், பாதசாரிகள் நடைபாதைகள், நடைமேடைகளில் புதிய கூரைகள், புதிய லிப்ட்கள், நான்கு நடைமேடைகளில் எஸ்கலேட்டர்கள், டிக்கெட் கவுன்ட்டர்கள், பயணியர் தகவல் தெரிவிக்கும் டிஜிட்டல் பலகைகள், வாகன நிறுத்தம் வசதி, உணவகங்கள் உள்ளிட்ட பணி நடைபெற்று வருகிறது.

இந்த ரயில் நிலையம் மேம்பாட்டு பணிகள் அனைத்தும் முடிந்து, கடந்த டிசம்பர் மாதம் திறப்பதாக, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement