கேரட் மூட்டை லாரியின் மேல் ஆபத்தான பயணம்

கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் மழை நாட்களில் கேரட் லோடு ஏற்றிய லாரியின் மேல் தொழிலாளர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருவது தொடர்கிறது.

நீலகிரி மாவட்டத்தில், வழக்கத்திற்கு மாறாக, ஜன., மாதம் பாதியில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால், பனிப்பொழிவு குறைந்து, தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்களில் ஈரப்பதம் அதிகரித்து வருகிறது. இதனால், மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், கோத்தகிரி பகுதியில் தயாரான கேரட் அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட கேரட், தோட்டத்தில் இருந்து, மூட்டைகளாக லாரியில் ஏற்றி, நீர்நிலைகளில் கழுவி தரம் பிரித்து, மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

இதில், ஆபத்தை உணராமல், தொழிலாளர்கள் மூட்டைகளின் மேல் அமர்ந்து பயணிப்பது அதிகரித்துள்ளது. தற்போது, மழை பெய்து வரும் நிலையில், லோடு ஏற்றிய லாரி வளைவுகளில் திரும்பும்போது, கேரட் மூட்டைகளின் மேல் அமர்ந்திருக்கும் பயணி களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Advertisement