81 வயதில் 7வது முறை அதிபராக வெற்றி; உகாண்டாவின் யோசேரி முசவேனியை உற்று பார்க்கும் உலக நாடுகள்
கம்பாலா: 81 வயது யோவேரி முசவேனி, உகாண்டாவின் அதிபராக 7வது முறையாக வென்று உள்ளார். இவர் பதிவான ஓட்டுகளில் 71.65 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளார்.
உகாண்டாவின் அதிபராக 1986ம் ஆணடு முதல் இருப்பவர் யோவேரி முசவேனி. இவருக்கு தற்போது 81 வயதாகிறது. 7வது முறையாகவும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அந்தாட்டின் அதிபர் மற்றும் பார்லிமென்ட் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஜன.15ல் நடைபெற்றது. 7வது முறையாக அதிபர் பதவிக்கு யோவேரி முசவேனி களம் இறங்கியதால் உலக அரசியலில் இந்த தேர்தல் உற்று கவனிக்கப்பட்டது.
ஓட்டுப்பதிவுக்கு பின்னர், அதன் முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. பதிவான ஒட்டு மொத்த ஓட்டுக்களில் யோவேரி முசவேனி 71.65 சதவீதம் ஓட்டுகளை பெற்று 7வது முறையாக அதிபராக வென்றுள்ளார். தேர்தலில் இவருக்கு போட்டியாக இளைய சமுதாயத்திடம் அதிக செல்வாக்கு கொண்ட பாபி வைன் என்பவர் களம்கண்டார்.
இவர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி என்று கூறப்பட்ட நிலையில், 40 ஆண்டு கால யோவேரி ஆட்சிக்கு பாபி வைன் முடிவுரை எழுதுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக, அதிபராக யோவேரி முசவேனியே தொடர வேண்டும் என்று மக்கள் ஓட்டளித்து உள்ளனர்.
இணையம் முடக்கம், ராணுவ படையெடுப்பு, ஓட்டுச்சாவடி முகவர்கள் கடத்தல் என அனைத்து சர்ச்சைகளுக்கு நடுவே யோவேரி முசவேனி 7வது முறையாக அதிபராக வென்றுள்ளார். இந்த வெற்றியை நாடு முழுவதிலும் உள்ள அவரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.