பாதையை மறைத்த அடர்பனியால் கோரம்; பஞ்சாபில் சாலை தடுப்பில் கார் மோதி 5 பேர் பலி

1

பதின்டா; பஞ்சாபில் அடர்பனி எதிரொலியாக, தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் சாலை தடுப்பில் மோதியதில் பெண் காவலர் உள்பட 5 பேர் பலியாகினர்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் உள்ள பத்ராலா என்ற கிராமம் அருகே குஜராத் மாநில பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்று அதிகாலையில் விபத்துக்குள்ளானது. சாலை தடுப்பில் கார் மோதி தூக்கி வீசப்பட அதில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தகவலறிந்த போலீசார், உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். சடலங்களை மீட்ட அவர்கள், படுகாயம் அடைந்த மற்றவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் எஸ்.பி. நரிந்தர் சிங் கூறியதாவது; கார் ஒன்று சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாக எங்களுக்கு தகவல் வந்தது. விபத்து நிகழ்ந்த பகுதி பதிண்டா காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியாகும்.

சம்பவ பகுதியில் 5 பேர் உயிரிழந்தனர். சடலங்கள் மீட்கப்பட்டன. இறந்தவர்கள அர்ஜூன், சதீஷ், ஜனக், பரத் மற்றும் அமிதா பான் என அடையாளம் காணப்பட்டது. அனைவரும் குஜராத்தில் வசித்து வருபவர்கள். ஆதார் அட்டைகள், இன்னபிற ஆவணங்கள் மூலம் அவர்களின் அடையாளங்கள் உறுதிபடுத்தப்பட்டன.

இறந்தவர்களில் அமிதா பான் என்பவர் பெண் காவலர் ஆவார். குஜராத் காவல்துறையில் பணியாற்றியவர். பதிண்டாவில் இருந்து தப்வேலிக்கு பயணித்த போதுதான் விபத்து நிகழ்ந்து இருக்கிறது. அடர் மூடுபனி காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று எண்ணுகிறோம். விசாரணை நடக்கிறது.

இவ்வாறு போலீஸ் எஸ்.பி., நரிந்தர் சிங் கூறினார்.

நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனத்தை ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Advertisement