வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு உறுதி!

2


- நமது சிறப்பு நிருபர் -

உலகின் எந்த மூலையில், போர், இயற்கை பேரிடர், கலவரம் போன்ற அசாதாரணமான சூழல் நிலவினாலும், அங்கு வசிக்கும் தங்கள் குடிமக்களை மீட்டு வருவதில், இந்திய அரசு எப்போதும் துரிதமாக செயல்பட்டு வந்துள்ளது. அந்த வரிசையில், மேற்காசிய நாடான ஈரானில் சிக்கித் தவிக்கும், 10,000 இந்தியர்களை மீட்கும் பணி வேகம் எடுத்துள்ளது. இந்த நேரத்தில், நம் வெளியுறவுத்துறை இதுவரை நடத்திய மிக முக்கிய மீட்பு பணிகள் குறித்து ஒரு ரவுண்ட் - அப்.


மேற்காசிய நாடான ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணமதிப்பு வீழ்ச்சி ஆகிய பிரச்னைகள் காரணமாக மக்கள் சமீபத்தில் போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டம் இன்று, ஈரானில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ஆட்சியை அசைத்து பார்க்கும் அரசியல் மாற்றம் கோரும் போராட்டமாக மாறியுள்ளது.


அங்கு 10,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தொழில், வேலை ஆகிய வற்றில் ஈடுபட்டுள்ளனர். போராட்டங்களை தொடர்ந்து, வெளியுறவுத் துறை, 'இந்தியாவுக்கு திரும்ப விரும்பும் இந்தியர்களை அழைத்து வர தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


முதற்கட்டமாக, அங்கிருக்கும் சில இந்திய ர்களை வெளியேற்றும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது. இது இந்தியாவின் முதல் மீட்பு நடவடிக்கை அல்ல. 1990களிலிருந்து, உலகின் பல்வேறு போர், கலவரம், பேரிடர் பகுதிகளில் இருந்து இந்தியர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஆப்பரேஷன் 'ராஹத்' - ஏமன், 2015





2015ல், ஏமன் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தபோது இந்தியர்கள் 5,600 பேர் இந்திய விமானப்படை மற்றும் கடற்படை கப்பல்கள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

ஆப்பரேஷன் 'கங்கா' - உக்ரைன், 2022



உக்ரைன் - ரஷ்யா போர் வெடித்தபோது, உக்ரைனில் உயர் கல்வி படித்து வந்த இந்திய மாணவர்கள் 18,000க்கும் மேற்பட்டோர் விமானங்கள் மூலம் தாயகம் திரும்பினர்.

ஆப்பரேஷன் 'காவேரி' - சூடான், 2023



வட ஆப்ரிக்க நாடான சூடானின் கர்த்தோமில் 2023ல் கடும் மோதல்கள் நிலவியபோது, 3,900 இந்தியர்கள், கடற்படை கப்பல்கள் மற்றும் சி.17 விமானங்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

இது மட்டுமின்றி 2020ல், உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்று காலத்தில், சீனாவின் வூஹான் உள்ளிட்ட கொரோனா பரவிய பகுதிகளில் சிக்கியிருந்த 3,000க்கும் அதிகமான இந்தியர்கள் மீட்கப்பட்டனர். அதே பாதையை, தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்ந்து வருகிறார்.

Advertisement