வலியால் துடித்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

ஊட்டி: ஊட்டியில் வலியால் துடித்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஊட்டி கிளன்மார்கள் பகுதியில் இருந்து, '108' ஆம்புலன்சுக்கு, 'பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்து கொண்டிருக்கிறார்,' என, நேற்று முன்தினம் இரவு, 11:50 மணிக்கு அழைப்பு வந்துள்ளது.

உடனடியாக, பைலட், மற்றும் மருத்துவ உதவியாளர் குறிப்பிட்ட பகுதிக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது, காவியா ஸ்ரீ என்ற கர்ப்பிணி, பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்தததை உறுதி செய்து, ஆம்புலன்சில் ஏற்ற தயாராகினர்.பிரசவ வலி அதிகரித்ததால், வீட்டில் பிரசவம் பார்க்கப்பட்டது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, 2.3 கிலோ எடை கொண்ட பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து, நலமுடன் இருந்த தாயும், சேயும் ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பொங்கல் பண்டிகை அன்று வந்த அழைப்புக்கு உடனடியாக சென்று பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பெண்ணின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Advertisement