போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு உலகளந்த பெருமாள் கோவிலில் இலவச 'பார்க்கிங்'

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், உலகளந்த பெருமாள் கோவில் வளாகத்தில் வாகனங்களை, தற்காலிகமாக இலவச 'பார்க்கிங்' செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலை சுற்றிலும் உலகளந்த பெருமாள் கோவில், ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில், குமரகோட்டம் முருகன் கோவில், சங்குபாணி விநாயகர், அபிராமீஸ்வரர் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன.

இக்கோவில்களுக்கு கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வரும் பக்தர்கள், தங்களது வாகனங்களை உலகளந்த பெருமாள் மாட வீதி, காமாட்சியம்மன் சன்னிதி தெரு, பஞ்சுகொட்டி தெரு உள்ளிட்ட பகுதியில், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் இருபுறமும் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

இதனால், இப்பகுதியில் முகூர்த்தம், விடுமுறை, பண்டிகை நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், உலகளந்த பெருமாள் கோவில் பின்புறம் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில், வாகனங்கள் நிறுத்துவதற்கு 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், காமாட்சியம்மன், உலகளந்த பெருமாள் கோவில் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், காஞ்சிபுரம் போலீசார் மற்றும் உலகளந்த பெருமாள் கோவில் நிர்வாகம் சார்பில், கோவில் பின்புறம் உள்ள இடத்தில், பக்தர்கள் தங்களது வாகனங்களை தற்காலிகமாக இலவச பார்க்கிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் சார்பில், காமாட்சியம்மன், உலகளந்த பெருமாள் கோவிலை சுற்றியுள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும் என, போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம் கூறியதாவது:

பொங்கல் பண்டிகையையொட்டி, உலகளந்த பெருமாள், காமாட்சியம்மன் கோவிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, தினமும் ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்களும் வந்து செல்கின்றனர்.

கோவில் அருகே உள்ள தெருக்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, உலகளந்த பெருமாள் கோவில் பின்புறம் ஒன்றரை ஏக்கர் பரப்பளவு உள்ள கோவில் இடத்தில் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்ய, காஞ்சிபுரம் நிர்வாகம் மற்றும் போலீசார் கேட்டுக் கொண்டதின்படி, தற்காலிகமாக, கோவில் இடத்தில் வாகனங்கள் இலவசமாக 'பார்க்கிங்' செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பின், கோவிலுக்கு வருவாய் வரும் வகையில், வாகனம் நிறுத்துமிடத்திற்கு பகிரங்க பொது ஏலம் விடப்பட்டு, வாகனங்கள் பார்க்கிங் செய்ய முறையான கட்டணம் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement