துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்

திருவள்ளூர்: சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, காலை - மதியம் உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கு, தனியார் உணவகம் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டம், அங்கு வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பிற மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கும், உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.

கடந்த டிச., மாதத்தில், தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் காலை உணவு மட்டும் வழங்க, நகராட்சி நிர்வாக ஆணையகம் முடிவு செய்தது. இதற்காக, தனியார் உணவகம் மூலம் ஒப்பந்தம் வழங்கப்பட்டு, தினமும் காலை உணவு மட்டும் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், பூந்தமல்லி, திருநின்றவூர், திருவேற்காடு, பொன்னேரி மற்றும் திருத்தணி ஆகிய ஆறு நகராட்சிகளில், காலை வேலையில் பொங்கல், இட்லி, கிச்சடி, வடை, சட்னி, சாம்பார் வழங்கப்பட்டு வருகிறது.

தினமும் காலையில், சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகங்களுக்கு, உணவகங்கள் மூலம் உணவு கொண்டு வரப்பட்டு, துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதிகாலையில் பணிக்கு வரும் துாய்மை பணியாளர்களுக்கு, காலையில் உணவு வழங்கும் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் பணிபுரியும் துாய்மை ஊழியர்களுக்கும், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

திருவள்ளூர் நகராட்சியில், 360 பேருக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

அதேபோல், பொன்னேரியில் 120, திருத்தணியில் 60, பூந்தமல்லியில் 360, திருவேற்காடில் 320 என, நிரந்தர மற்றும் தனியார் துாய்மை பணியாளர்களுக்கு, காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, நகராட்சி சுகாதார பிரிவு அலுவலர் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கும், தமிழக அரசின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. தற்போது, சோதனை முயற்சியாக, அவர்களுக்கு காலை உணவு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

காலையில், இட்லி, பொங்கல், கிச்சடி, வடை, சட்னி, சாம்பார் வழங்கப்படுகிறது. இதற்காக, நகராட்சியில் இரண்டு செட் டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

அன்றைய தினம் உணவு வழங்கப்படும் போது, முதல் நாளில் வழங்கப்பட்ட காலி டிபன் பாக்சை உணவக வினியோகித்தனர் திரும்ப பெற்றுக் கொண்டு, மறுநாள் அதில் காலை உணவை வழங்குவர். இத்திட்டம், துாய்மை பணியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து, மாநிலம் முழுதும் அதிகாரப்பூர்வமாக, வரும் 25ம் தேதி தமிழக முதல்வர் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம், தமிழகம் முழுதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான துாய்மை பணியாளர்கள் பயன்பெறுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement