உலகக்கோப்பை கால்பந்து அணிகளுக்கு அமெரிக்காவில் நுழைய தடையா? அமெரிக்கா வெளியிட்ட புதிய அறிவிப்பு

6


வாஷிங்டன்: குடியேற்ற விசாவுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக, உலகக்கோப்பை கால்பந்து ரசிகர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், புதிய விளக்கத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


அமெரிக்கர்களின் செல்வத்தை சுரண்டுவதைத் தடுக்கும் விதமாக, பாகிஸ்தான், வங்கதேசம், ஈரான், ரஷ்யா உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசாவுக்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் கடந்த வாரம் அறிவிப்பை வெளியிட்டார். அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்கவும், பணிபுரியவும் விரும்புபவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இந்தப் பட்டியலில் இடம்பெறாத நாடுகளின் பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை ஜனவரி 21ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு உலகக்கோப்பை கால்பந்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. காரணம், இந்த ஆண்டு பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி, அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் நடைபெற இருக்கிறது. அமெரிக்கா தடை விதித்துள்ள 75 நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 15 நாடுகள் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கின்றன.

பிரேசில், மொராக்கோ, ஹைட்டி, அல்ஜீரியா, கேப் வெர்டே, கொலம்பியா, ஐவரி கோஸ்ட், எகிப்து, கானா, ஈரான், ஜோர்டான், செனகல், துனிசியா, உருகுவே மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் விளையாடுகின்றன. எனவே, இந்த நாடுகளின் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் அமெரிக்காவில் நடக்கும் போட்டியைக் காண அனுமதியளிக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில், இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்; இந்தத் தடை குடியேற்ற விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும். சுற்றுலாப் பயணிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், மற்றும் ஊடகவியலாளர்கள் பயன்படுத்தும் குடியேற்றம் அல்லாத விசாக்களுக்கு பொருந்தாது. எனவே உலகக்கோப்பை கால்பந்து ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement