நெடுஞ்சாலையில் விளம்பர பேனர் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

திருவாலங்காடு: கனகம்மாசத்திரம் கூட்டுச்சாலையில் பேனர் கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்குவதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.

சென்னை ---- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் அருகே கனகம்மாசத்திரம் கூட்டுச்சாலை அமைந்துள்ளது.

இங்கு, அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, பொதுமக்களும் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு, போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், சாலையோரம் பேனர்களை வைத்துள்ளனர்.

மேலும், அனுமதி பெறாமல் வைக்கப்படும் பேனர்கள் குறித்து, போலீசார் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், புற்றீசல் போல புதிது புதிதாக சாலையில் பேனர்கள் முளைத்துள்ளன.

இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:

பேனர் கலாசாரத்தில் பலரின் உயிர்கள் பறிபோன கொடுமைகள் அரங்கேறி உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக, நீதிமன்றம் பலமுறை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

ஆனால், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கண்டுகொள்வதில்லை.

தற்போது, திருவாலங்காடு மாநில நெடுஞ்சாலையில் இருந்து திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இணையும் பகுதியான, கனகம்மாசத்திரம் கூட்டுச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனரால், எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை.

இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பேனர்கள் சாலையில் தவறி விழுந்தால், அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, விதிமீறி சாலையோரம் வைக்கப்பட்டுள்ள, பேனர்களை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement