முடியனுார் சிவன் கோவில் நுாற்றாண்டு பழமையான ஓவியம் பாதுகாக்கப்படுமா?

தியாகதுருகம்: முடியனுார் அருணாச்சலேஸ்வரர் கோவிலின் மேற்கூரையில் வரையப்பட்டுள்ள நுாற்றாண்டு பழமையான ஓவியங்களை பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தியாகதுருகம் அடுத்த முடியனுாரில் நுாற்றாண்டுகள் பழமையான அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது.

கோவில் வளாகத்தில் அர்த்தமண்டபத்துடன் சுவாமி மற்றும் உண்ணா மலை அம்மன் சன்னதி மற்றும் அதை சுற்றி விநாயகர் முருகன் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபத்தின் மேற்கூரையில் 19ம் நுாற்றாண்டில் வரையப்பட்ட பழமையான ஓவியங்கள் உள்ளன.

இது அக்காலத்தில் கிடைத்த வண்ணக்கலவையை கொண்டு மிக கலை நயமாக சுவாமி உருவங்கள் தீட்டப்பட்டுள்ளது. ஓவியங்கள் கால வெள்ளத்தில் மெல்ல அழிந்து வருகிறது.

இதனை பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் தரப்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் முழுமையான பராமரிப்பு இன்றி உள்ளது.

மழை மற்றும் பனியின் ஈரப்பதமான காற்றால் ஓவியங்களின் மீது பூஞ்சை படிந்து நாளுக்கு நாள் சிதைந்து வருகிறது.

நுாற்றாண்டுகளுக்கு முன் வரையப்பட்ட பழமையான ஓவியங்களை பாதுகாக்க இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முடியனுார் அருணாச்சலேஸ்வரர் கோவில் மேற் கூரையில் வரையப்பட்டுள்ள பழமையான ஓவியங்கள்.

Advertisement