உரிமையை விட்டுக்கொடுக்கக் கூடாது; டில்லி செல்லும் முன்பு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி

28


சென்னை: தமிழக தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தேசிய தலைமையை சந்திக்க டில்லி புறப்படும் முன்பு, 'நம் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்,' என்று வலியுறுத்த இருப்பதாக விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

இத்தனை ஆண்டுகள் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும், ஆட்சியில் காங்கிரஸ் பங்கெடுத்தது இல்லை. இது பற்றி குரல் எழுப்பியதும் இல்லை. ஆனால், தமிழக சட்டசபைக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்று கூறி, காங்கிரஸ் அழுத்தம் கொடுத்து வருகிறது. இது திமுக சற்றும் எதிர்பாராத ஒன்றாகும்.

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு தர வேண்டும், கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வெளிப்படையாக கருத்து கூறி வருவது, திமுகவினர் மத்தியில் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தேசிய தலைமை நிர்வாகிகள் குழு முக்கிய ஆலோசனை நடத்த இருக்கின்றனர். இதற்காக,தமிழக காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் டில்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த சந்திப்பின் போது, தமிழக காங்கிரஸின் முழக்கமான ஆட்சியில் பங்கு மற்றும் தவெகவுடன் கூட்டணி விருப்பம் உள்ளிட்டவை பற்றி ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.

முன்னதாக, டில்லி புறப்படும் முன்பு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில், "இன்று காலை மதுரையில் இருந்து புறப்பட்டு டில்லி செல்கிறேன். எனக்காக அல்ல.. என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்கார்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதற்காக .. அகில இந்திய காங்கிரஸ் தலைவரிடமும்.. இந்தியாவின் எதிர்காலம் இன்றைய எதிர்கட்சி தலைவரிடமும் கருத்து சொல்ல .. நம் உரிமையை மீண்டும் விட்டு கொடுத்து விட கூடாது என்று சொல்ல.. மதவெறி கும்பல் தோற்கடிக்க வேண்டும் அத்தோடு நம் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று சொல்ல. நட்புக்கு தோள் கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement