ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை; பல்லடம் போலீசார் எச்சரிக்கை

பல்லடம்: பல்லடம் என்.ஜி.ஆர். ரோட்டில், பாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால், சட்ட ரீதியான நடவடிக்கை பாயும் என, போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

பல்லடத்தில், தினசரி மார்க்கெட், வார சந்தை, கடைவீதி, வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் ஒருங்கிணைந்த பகுதியாக என்.ஜி.ஆர். ரோடு உள்ளது. இப்பகுதியில், வாடகை கொடுத்து கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக, சில வெளியூர் வியாபாரிகள், என்.ஜி.ஆர். ரோட்டிலேயே கடை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.

இதுதவிர, அதிக ஒலி எழுப்பியபடி ஸ்பீக்கர் வைத்து விற்பனையில் ஈடுபடுவதால், வாடகைக்கு கடை நடத்தும் வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நடைபாதையில் கடைகள் அமைப்பதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், அந்த ரோட்டில் தேவையற்ற வாகன நெரிசலும் ஏற்படுகிறது.

இவ்வாறு அனுமதியின்றி ரோட்டில் கடை அமைக்கும் வியாபாரிகளை அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தினசரி மார்க்கெட் வியாபாரிகள், சமீபத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், பேச்சுவார்த்தை நடத்திய நகராட்சியினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தனர். இதன்படி, பல்லடம் போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், 'என்.ஜி.ஆர். ரோட்டில் வாகனங்களை நிறுத்தி நெரிசலை ஏற்படுத்தும் வாகன வியாபாரிகள், ஒலி பெருக்கி வைத்து இடையூறு ஏற்படுத்தினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

நகராட்சியில் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே என்.ஜி.ஆர். ரோட்டில் வண்டி கடை நடத்த அனுமதிக்கப்படுவார்கள்,' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.

வியாபாரிகள் கூறுகையில், 'வெறும் எச்சரிக்கை பலகை வைத்துவிட்டு, போலீசார் கண்டும் காணாமல் இருக்கக்கூடாது. என்.ஜி.ஆர். ரோட்டை ஆக்கிரமித்து கடை அமைக்கும் விவகாரம் நீண்ட காலமாக உள்ளது. எனவே, போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நகராட்சி நிர்வாகமும், போலீசாரும் இணைந்து இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.

Advertisement