உற்சவமூர்த்திகளின் தத்ரூப படக்காட்சி அறநிலையத்துறை காலண்டர் வெளியீடு

திருப்பூர்: பிரசித்தி பெற்ற கோவில்களின் உற்சவமூர்த்திகளின் படங்களுடன், பக்தி மணம் ததும்பும் மாத காலண்டரை, ஹிந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.

ஹிந்து அறநிலையத்துறை பராமரிக்கும் கோவில்களில், உற்சவமூர்த்திகளின் அலங்கார காட்சி புகழ்பெற்றவை.

முக்கிய கோவில்களின் உற்சவமூர்த்திகள் படங்களுடன், அறநிலையத்துறை சார்பில், 2026ம் ஆண்டுக்கான காலண்டர் தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு முத்திரையுடன், திருவண்ணாமலையார் - உண்ணாமுலையம்மன் படங் களுடன் முகப்பு பக்கம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மதுரை முக்குருணி விநாயகர், ராமேஸ் வரம் பர்வதவர்த்தினி சமேத ராமநாத சுவாமி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சுவாமி, நாமக்கல் ஆஞ்சநேயர், பெரியபாளையம் பவானியம்மன், மதுரை கள்ளழகர், திருவாரூர் ஆழித்தேர் மற்றும் தியாக ராஜசுவாமி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், காஞ்சிபுரம் ஏழவார் குழலி உடனுறை ஏகாம்பரநாத சுவாமி, மருதமலை சுப்ரமணிய சுவாமி, சமயபுரம் மாரியம்மன், திருப்போரூர் கந்தசாமி ஆகிய உற்சவமூர்த்திகளின், ராஜ அலங்கார படங்களுடன், காலண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள காலண்டர், தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது; தலா, 120 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது,' என்றனர்.

Advertisement