தேசிய அளவிலான ஸ்கேட்டிங் அன்னூரில் இருவர் தகுதி

அன்னூர்: மாநில அளவில் வெற்றி பெற்று, தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு, அன்னூரில் இருவர் தகுதி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேஷன், நேரு யுவா கேந்திரா சங்கதன் உடன் இணைந்து, மாநில அளவிலான ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியை மதுரையில் நடத்தியது.

இதில் அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி காவியா, 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில், 400 மீ., ஸ்கேட்டிங்கில் தங்கப்பதக்கமும், 100 மீ., ரோடு ரேஸில் வெள்ளி பதக்கமும் வென்றார்.

இதையடுத்து சென்னையில் வரும் 26ம் தேதி நடைபெற உள்ள தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

இம்மாணவியின் சகோதரர் நான்காம் வகுப்பு மாணவர் சாய் மிதுன், எட்டு வயதுக்கு உட்பட்ட பிரிவில், 200 மீ., மற்றும் 400 மீ., ஸ்கேட்டிங்கில் வெள்ளி பதக்கம் வென்றார்.

இதையடுத்து இருவரும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். தேர்வு பெற்றவர்களுக்கு சொக்கம்பாளையம் கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பொங்கல் விழா கமிட்டி ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் குமார் மற்றும் பொதுமக்கள் சார்பில் போட்டியில் பங்கேற்க 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது.

Advertisement