இயற்கை விவசாயம் சார்ந்த சுற்றுலாவுக்கு ஆய்வு; மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல் 

பொள்ளாச்சி: இயற்கை விவசாயத்துடன் சேர்ந்து சுற்றுலாவை மேம்படுத்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது, என, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.


பொள்ளாச்சி அருகே, ஆனைமலை சேத்துமடை பகுதியில் இயற்கை விவசாயி சரவணன் என்பவரது தோட்டத்தில், இயற்கை விவசாயம் குறித்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆய்வு செய்தார்.



அப்போது, மாட்டு வண்டியில் பயணம் செய்த அமைச்சர், இயற்கை சாகுபடி முறைகள்,விதைகள் உற்பத்தி, இயற்கை முறையில் காளான் உற்பத்தி, பாரம்பரிய முறையில் விவசாயம் குறித்து ஆர்வமாக கேட்டறிந்தார்.


பதநீர் இறக்குதல், பட்டி பொங்கல் வழிபாடு முறைகள் குறித்து விவசாயிகள் கூறியதை
ஆர்வமுடன் கேட்டார். தொடர்ந்து, மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் கற்பிப்பது குறித்து
பார்வையிட்டதுடன், மரக்கன்று நடவு செய்தார்.


அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:




இயற்கை விவசாயம் வெறும் பயிற்சியல்ல; இது அறிவு சார்ந்த விஷயமாக உள்ளது. ஒரு தலைமுறையில் இருந்து மற்ற தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் இளம் தலைமுறைக்கு கற்று தருவது மகிழ்ச்சி அளிக்கிறது.


நகர்ப்புறங்களில் வசிப்போருக்கு உணவு உற்பத்தியில் உள்ள பிரச்னைகள், எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என தெரிவதில்லை. இயற்கை விவசாயம் செய்வதோடு, கற்றுத்தருவது மாணவர்களிடம் விவசாயத்தின் மீதான ஆர்வத்தை துாண்டும்.இளம் தலைமுறைகளின் கவனம், இயற்கை விவசாயம் மீது திரும்ப வாய்ப்பாக இருக்கும். இயற்கை விவசாயம் சார்ந்த சுற்றுலாவுக்கு உகந்த பகுதியாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. பொள்ளாச்சியில் சுற்றுலாவை மேம்படுத்த தமிழக அரசு, கருத்துரு அனுப்பினால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கள் இறக்குவது என்பது மாநில அரசின் முடிவாகும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement