ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : ஹெச்.டி.எப்.சி., லைப்: ஜி.எஸ்.டி., தற்காலிக தடையே
இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தனியார் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனமாக உள்ளது ஹெச்.டி.எப்.சி., லைப். 2025--26ம் நிதியாண்டு முதல் அரையாண்டின் படி, ஒட்டுமொத்த தனியார் லைப் இன்ஷூரன்ஸ் சந்தையில், 16.60 சதவீத சந்தையை இந்நிறுவனம் வைத்துள்ளது. ஒட்டுமொத்த இன்ஷூரன்ஸ் சந்தையில், 11.90 சதவீதத்தை வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் புரமோட்டர் நிறுவனமான ஹெச்.டி.எப்.சி., வங்கி இந்த நிறுவனத்தில் 50.25 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
இந்நிறுவனம் இன்ஷூரன்ஸ் மட்டுமல்லாது; பல்வேறு முதலீட்டு திட்டங்களையும் கொண்டுள்ளது. இதில் புரொடக்ஷன், பென்ஷன்ஸ், சேவிங்க்ஸ் போன்றவை அடங்கும். இந்த திட்டங்கள் அனைத்தும் நிலையான வளர்ச்சி, வலுவான மார்ஜின் மற்றும் அதிக குவாலிட்டியான வினியோகத்துக்கு பெயர் பெற்றவை.
நிறுவனத்தின் திட்டங்கள்:
நிறுவனத்தின் திட்டங்கள் நன்கு பல்வகைப்படுத்தப்பட்டு உள்ளன. மொத்த திட்டங்களில், 'யூலிப்' திட்டங்கள் 42 சதவீத பங்களிப்புடன் முன்னிலையில் உள்ளன.
இதைத் தொடர்ந்து பங்களிப்பு திட்டங்கள் பிரிவு 29 சதவீதம் பங்களிப்பை கொண்டிருக்கிறது. பங்களிப்பு அல்லாத சேமிப்பு திட்டங்கள் 18 சதவீத பங்களிப்பும்; ஆண்டு பிரிவு 4 சதவீத பங்களிப்பும் மற்றும் பங்களிப்பு அல்லாத புரொடக்ஷன் 7 சதவீத பங்களிப்பையும் கொண்டிருக்கிறது.
காலாண்டு முடிவுகள் :
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த ஏ.பி.இ., 9 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. புதிய வணிக மதிப்பு கிட்டத்தட்ட 8 சதவீதம் உயர்ந்து 1,010 கோடி ரூபாயை எட்டியுள்ளது. மேலும் புதிய வணிக மதிப்பு மார்ஜின், 24.10 சதவீதமாக உள்ளது. குறுகிய கால செலவுகள் மற்றும் ஜி.எஸ்.டி., மாற்றங்கள் லாபத்தை பாதித்ததால், லாப வளர்ச்சி சற்று குறைவாக இருந்தாலும், நிறுவனத்தின் வளர்ச்சி சீராக உள்ளது. மார்ஜின்கள் நிலையாக உள்ளன. ஆனால், தற்போது நிறுவனம் தற்காலிக ஜி.எஸ்.டி., தொடர்பான சவால்களை நிர்வகித்து வருகிறது.
வளர்ச்சிக்கான காரணிகள்:
இரண்டாவது காலாண்டில், யூலிப் பாலிசிகள் நிறுவனத்துக்கு மிகப்பெரிய வளர்ச்சி காரணியாக இருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டில் ஏ.பி.இ., 42 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.
மேலும் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் பங்களிப்பு திட்டங்களில் புதிய புராடக்ட் அறிமுகங்கள் காரணமாக, ஏ.பி.இ., இரட்டிப்பாகி உள்ளது.
மேலும் ரீடெயில் புரொடக்ஷன் பிரிவு 40 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது. அத்துடன் டேர்ம் இன்ஷூரன்ஸ் பங்களிப்பும் மேம்பட்டுள்ளது.
ஆனால், பங்களிப்பு அல்லாத சேமிப்பு திட்டங்கள் மற்றும் ஆண்டு தொகை பிரிவுகள், கடந்த 2-வது காலாண்டில் பலவீனமாக உள்ளது. நடப்பு நிதியாண்டில் இரண்டாவது அரையாண்டில் இந்த பிரிவுகளின் வளர்ச்சியில் முன்னேற்றம் காணப்படும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.
வினியோக மேம்பாடு
இந்நிறுவனம் பல சேனல் வணிக மாதிரியை கொண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், ஏஜன்சி மற்றும் நேரடி சேனல்கள் நன்றாக மீண்டு வந்தன.
அதே நேரத்தில், வங்கி வாயிலான இன்ஷூரன்ஸ் விற்பனை மந்தமாக இருந்தது. முக்கியமாக தனது தாய் நிறுவனமான ஹெச்.டி.எப்.சி., வங்கிக்கு அப்பால், நிறுவனத்தின் விற்பனை விரிவடைந்து வருகிறது.
பிற வங்கிகள் வாயிலாக நடைபெற்ற இன்ஷூரன்ஸ் விற்பனை பங்கு, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டை விட இரண்டாவது காலாண்டில் மேம்பட்டுள்ளதாக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இது மைக்ரோ மார்க்கெட்டுகளுக்குள் தொடர்ந்து செல்ல உதவுகிறது. இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் புதிய வணிகத்தின் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கிறது.
நிதி நிலைமை
நடப்பு நிதியாண்டில் முதல் அரையாண்டு இறுதியில் நிறுவனத்தின் உள்ளார்ந்த மதிப்பு கிட்டத்தட்ட 59,540 கோடியாக இருந்தது. மேலும் நிறுவனத்தின் கடன் தீர்க்கும் திறன் விகிதம் 2-வது காலாண்டில், 175 சதவீதமாக இருந்தது. இந்த விகிதத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில், 750 கோடி வரை துணைக் கடனை திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
எதிர்கால கணிப்பு
ஹெச்.டி.எப்.சி., லைப் நிர்வாகம் 12--13 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்கிறது. இது இந்த துறையின் வளர்ச்சியை விட அதிகம். மேலும் ஜி.எஸ்.டி., பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகள் முழுமையாக நடைமுறைக்கு வருவதால் அடுத்த நிதியாண்டில் வி.என்.பி., வளர்ச்சி சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிறுவனம், ஆயுள் காப்பீட்டு துறையில் தொடர்ந்து ஒரு உயர்தர காம்பவுண்டர் நிறுவனமாக இருக்கிறது. நடப்பு நிதியாண்டில் 2-வது காலாண்டில் யூலிப், பங்களிப்பு திட்டங்கள் மற்றும் புரொடக்ஷன் பிரிவுகள் வாயிலாக சீரான வளர்ச்சியை எட்டியுள்ளது.
ஜி.எஸ்.டி., மாற்றங்கள் என்பது ஒரு தற்காலிகத் தடை மட்டுமே. அது ஒரு கட்டமைப்பு ரீதியான பிரச்னை அல்ல. செலவு கட்டுப்பாடுகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் மீதான செயல்பாடுகளே மார்ஜின் எவ்வளவு விரைவாக மீண்டு வரும் என்பதை தீர்மானிக்கும்.