வங்கதேசத்தை குழப்பத்தில் தள்ளும் முகமது யூனுஸ்; ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு

2

டாக்கா: அரசியல் வெற்றிடத்தை பயங்கரவாதத்தால் நிரப்புவதன் மூலம், வங்கதேசத்தை முகமது யூனுஸ் குழப்பத்தில் தள்ளிவிடுவதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா எச்சரித்துள்ளார்.

வங்கதேசத்தில் கடந்தாண்டு மாணவர்கள் போராட்டம் காரணமாக, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகினார். தற்போத இந்தியாவில் அவர் தஞ்சம் புகுந்துள்ளார். அவரின் விலகல் எதிரொலியாக பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அடுத்த மாதம் 12ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள சிறுபான்மை ஹிந்து மக்கள் மீதான தாக்குதல் அதிகரிக்க தொடங்கி உள்ளன. யூனுஸ் அரசாங்கம் வன்மத்துடன் இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாக ஷேக் ஹசீனா கூறி இருந்தார்.

இந் நிலையில், அரசியல் வெற்றிடத்தை பயங்கரவாதத்தால் நிரப்புவதன் மூலம், வங்கதேசத்தை முகமது யூனுஸ் குழப்பத்தில் தள்ளிவிடுவதாக ஷேக் ஹசீனா எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது;

வங்கதேசத்தில் தற்போது நிலவும் ஆபத்தான சூழ்நிலையானது, பிராந்திய அளவில் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு வழிவகுக்கும். ஹிந்து, கிறிஸ்துவர், பவுத்த மற்றும் மற்ற சிறுபான்மையின மக்கள், அவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல்கள் நடந்துள்ளன.

தனது 16 ஆண்டுகால பதவிகாலத்தில் பெரும் அழுத்தத்தின் கீழ் பணியாற்றி, மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, வங்கதேசத்தை செழிப்புடன் வைத்திருந்தேன். என்னையும், என் குடும்பத்தில் எஞ்சியுள்ள ஒரே சகோதரியான ஷேக் ரெஹானாவையும் படுகொலை செய்ய பல சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன. 2024ம் ஆண்டில் வெறுப்பு பிரசாரம், தவறான தகவல்கள் எதிரொலியாக ஏராளமான போராட்டக்காரர்கள், போலீசார் கொல்லப்பட்டனர்.

வரவிருக்கும் பொதுத்தேர்தலில் அவாமி லீக் போன்ற ஒரு மதச்சார்பற்ற கட்சியை ஒதுக்குவது என்பது வங்கதேசத்தில் பயங்கரவாதம் தலைதூக்க வழிவகுக்கும். இந்த சூழல் வங்கதேச மக்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கு, அதன் நட்பு நாடுகளுக்கும் ஒரு அச்சுறுத்தலாக இருக்கும்.

இவ்வாறு ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

Advertisement