குன்றத்து மலையில் சந்தனக்கூடு விழா: தர்காவின் மேல் முறையீடு நிராகரிப்பு

2

மதுரை : மதுரை, திருப்பரங்குன்றம் மலை, சந்தனக்கூடு உருஸ் திருவிழாவில், 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக்கோரி, தர்கா நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிராகரித்தது.


மதுரை, மாணிக்கமூர்த்தி ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில், 'திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா நிர்வாகம் மலையில் கந்துாரி விழா நடத்த தடை விதிக்க வேண்டும்' என, குறிப்பிட்டார்.


ஜன., 2ல் விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, 'சந்தனக்கூடு உருஸ் திருவிழாவை மட்டுமே தர்கா நிர்வாகம் நடத்த வேண்டும். விழாவில், 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். விலங்குகளை பலியிடக்கூடாது' என, இடைக்கால உத்தரவிட்டு, ஜன., 21க்கு ஒத்திவைத்தார்.


தர்கா மேலாண்மை அறங்காவலர் ஓசீர்கான், 'சந்தனக்கூடு விழாவில் அதிகம் பேர் பங்கேற்பர். தனி நீதிபதி, 50 பேர் மட்டுமே பங்கேற்க நிபந்தனை விதித்தார். அது தொடர்பான நிவாரணம் எதையும் மனுதாரர் கோரவில்லை. இச்சூழலில் 50 பேர் மட்டுமே பங்கேற்க விதித்த நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும்' என, மேல்முறையீடு செய்தார்.


இம்மனு நிலைக்கத்தக்கதா, இல்லையா என முடிவு செய்ய, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.



நீதிபதிகள், 'மலை உச்சி தீபத்துாணில் தீபமேற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், 'தீபம் ஏற்றும் கோவில் குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை மத்திய தொல்லியல் துறை, போலீசாருடன் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்' என, இந்த அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதை மீறி தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்க இயலாது' என்றனர்.


தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'தனி நீதிபதி இடைக்கால உத்தரவு தான் பிறப்பித்துள்ளார். இறுதி விசாரணையின் போது உங்கள் தரப்பு வாதத்தை தனி நீதிபதி முன் வைக்கலாம். இம்மனு ஏற்புடையதல்ல. நிராகரிக்கப்படுகிறது' என்றனர்.

Advertisement