ஓசூரில் 'சிட்கோ' தொழிற்பேட்டை

சென்னை: தொழில் முனைவோரின் கோரிக்கையை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழிற்பேட்டை அமைக்க, தமிழக அரசின் 'சிட்கோ' நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக வருவாய் துறை வாயிலாக இடம் தேடப்படுகிறது.

தமிழகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முக்கிய தொழில் மையமாக உருவெடுத்துள்ளது. இங்கு, மின் வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உள்ளிட்ட துறைகளில் பெரிய தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன.

இந்நிறுவனங்களுக்கு, உதிரிபாகங்கள் போன்றவற்றை உற்பத்திசெய்து வழங்குவதற்கு, ஓசூரில் புதிய தொழிற்பேட்டையை, சிட்கோ வாயிலாக அமைக்குமாறு தமிழக அரசுக்கு, சிறு, குறுந்தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, சூளகிரி தாலுகாவில் புதிய தொழிற்பேட்டை அமைக்க சிட்கோ முடிவு செய்துஉள்ளது.

இதற்காக, மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுடன் இணைந்து இடத்தை அடையாளம் காணும் பணியில் சிட்கோ நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது, கிருஷ்ணகிரியில் ஐந்து உட்பட தமிழகம் முழுதும், 135 தொழிற்பேட்டைகளை சிட்கோ நிர்வகித்து வருகிறது.

Advertisement