ஜப்பானுக்கு ஆடை ஏற்றுமதி 31 சதவீதம் உயர்வு 7 மாதத்தில் ரூ.1,216 கோடிக்கு வர்த்தகம்

திருப்பூர்: ஜப்பானிய மக்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததால், இந்திய ஆடை ஏற்றுமதி, 31 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

அமெரிக்க வரி உயர்வுக்கு பின், கடந்த நான்கு மாதங்களாக, புதிய சந்தைகளை கண்டறியும் முயற்சியும், குறைந்த அளவு வர்த்தகம் நடக்கும் சந்தைகளை மேம்படுத்தவும், ஏற்றுமதியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உற்பத்தியில், ஜப்பான் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அதற்கேற்ப ஜப்பான் ஏற்றுமதி மேம்பாட்டு திட்டத்தை உருவாக்கி, 'கிளஸ்டர்' வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன்பயனாக, கடந்த ஏழு மாதத்தில், ஜப்பானுக்கான ஆடை ஏற்றுமதி 31 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நிர்வாகிகள் கூறுகையில், 'நடப்பு நிதியாண்டில், இதுவரை இல்லாத அளவுக்கு, ஜப்பானுக்கான ஆடை ஏற்றுமதியில், 31 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு ஏற்றுமதி, 12 சதவீதமும், சுவிட்சர்லாந்துக்கு, 5.8 சதவீதமும் அதிகரித்துள்ளன.

மொரீஷியஸ் ஏற்றுமதி மட்டும் சரிவடைந்துள்ளது. ஆஸ்திரேலியா, தென் கொரியா, நார்வே, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கான இயல்பான ஏற்றுமதி தொடர்கிறது. இனிவரும் மாதங்களில், ஜப்பான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கான ஏற்றுமதி,மேலும் அதிகரிக்கும்,' என்றனர்.

@block_B@ ஜப்பானுக்கு ஆடை ஏற்றுமதி (ஏப்ரல் - அக்டோபர் நிலவரம்) ஆண்டு மதிப்பு (ரூ.கோடியில்) 2024-25 873 2025-26 1,216 31% உயர்வுblock_B

Advertisement