ஜனநாயகன் விவகாரம்: தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்

11

சென்னை: வாரிய தலைவர் தான் இறுதி முடிவு எடுப்பார். ஜனநாயகன் படம் விவகாரத்தில் இறுதி முடிவு இன்னும் எடுக்கவில்லை என ஐகோர்ட்டில் தணிக்கை வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்தது.


விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் சிக்கியுள்ளது. தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.ஐகோர்ட் தனி நீதிபதி தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால், அதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது.

தனி நீதிபதியின் உத்தரவுக்கு ஐகோர்ட் அமர்வு தடை விதித்தது. இந்த வழக்கு இன்று (ஜனவரி 20) காலை மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ''மண்டல சென்சார் போர்டில் யார் படத்தை பார்த்தார்கள். படத்தை பார்த்து சட்டப்படி ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது'' என நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பி உள்ளது.



அப்போது தணிக்கை வாரியம் தரப்பில் கூறியதாவது: படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழு தான் படத்தை பார்த்துள்ளது. தணிக்கை வாரிய தலைவர் தான் இறுதி முடிவு எடுப்பார். படத்திற்கு சான்றிதழ் வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்க மும்பையில் உள்ள அதிகாரிகளுக்கே அதிகாரம்.


14 காட்சிகளை நீக்கிய பின் படத்தைப் பார்த்து முடிவெடுக்கப்படும் என கூறினோம். 14 காட்சிகளை நீக்கிவிட்டதால் தணிக்கைச் சான்று வழங்க கோரினர். இறுதி முடிவு எடுப்பதற்கு முன், படம் தொடர்பாக புகார் வந்ததால் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு தணிக்கை வாரியம் விளக்கம் அளித்துள்ளது.



இந்த வழக்கு மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், படத்திற்கு எதிராக கொடுத்த புகார் குறித்து எந்த தகவலும் கொடுக்கவில்லை. படம் மறு ஆய்வுக்கு அனுப்புவதாக மட்டுமே தகவல் வந்தது. ஜன.,9 ல் வெளியிட முடிவு செய்ததால் அவசர வழக்காக முறையிடப்பட்டது.விதிகளை ஆய்வு செய்தே தனி நீதிபதி ஆய்வு செய்து தான் உத்தரவிட்டார். அவரது உத்தரவில் எந்தத் தவறும் இல்லை. தணிக்கை வாரியத்தின் உத்தரவு இதுவரை எங்களுக்கு வழங்கப்படவில்லை.படத்தை பார்வையிட்ட குழுவினர் ஒரு மனதாக சான்று வழங்க பரிந்துரைத்தனர். படத்தை பார்த்த பிறகு தங்களது கருத்துக்களை பதிவு செய்திருக்க வேண்டும். படத்தை பார்த்து வீட்டுக்கு சென்றுவிட்டு 4 நாட்கள் கழித்து புகார் அளிக்க முடியாது. புகாரில் கூறப்பட்ட காட்சிகள் மன்னதாகவே நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் நீக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. சான்று வழங்குவது தொடர்பாக தகவல் தெரிவித்து விட்டால் 2 நாளில் வழங்க வேண்டும். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அன்றைய தினமே தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. எங்களுக்கு கால அவகாசம் வழங்கப்படவில்லை என வாதிட்டார்.


தணிக்கை வாரியம், '' வழக்கு தாக்கல் செய்திருக்காவிட்டால் படம் மறு ஆய்வு செய்யப்பட்டு இருக்கும். மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது, எனத் தெரிவிக்கப்பட்டது.



தலைமை நீதிபதி,''தணிக்கை வாரியத்துக்கு போதுமான அவகாசம் அளித்து இருக்க வேண்டும்.படத்திற்கு எதிராக புகார் யாரிடம் இருந்து கிடைத்தது,'' என கேள்வி எழுப்பினார்.
அதற்கு தணிக்கை வாரியம், '' மும்பையில் உள்ள தணிக்கை வாரிய தலைவரிடம் இருந்து கிடைத்தது'' என்றார்.


இதனைத் தொடர்ந்து நீதிமன்றம், '' ஒரே நாளில் நீதிமன்ற நடைமுறைகளை முடித்து உத்தரவு தர வேண்டும் என்பதை ஏற்க முடியாது.,'' என்றனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement