காங்., மாவட்ட தலைவர்கள் நியமனம்; 68 புது முகங்களுக்கு வாய்ப்பு

சென்னை: தமிழக காங்கிரசில் அமைப்பு ரீதியாக, 71 மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், ஆறு பெண்கள் உட்பட, 68 புதிய முகங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள், 'கோட்டா சிஸ்டத்தில்' மாவட்ட தலைவர் பதவியை கைப்பற்றும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தகுதி அடிப்படையில் அனைவரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். நாடு முழுதும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த, மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட்டு, புது முகங்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழக காங்கிரசில், புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்க, டில்லி மேலிட பார்வையாளர்கள் 39 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அக்குழு, மாவட்ட தலைவர்களுக்கான நேர்காணல் நடத்தியது.

அதன் அடிப்படையில், ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பேர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு, டில்லி மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்படி, புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பெரும்பாலான மாவட்ட தலைவர்கள், தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளதால், கோஷ்டி தலைவர்களின் 'காலம் காலமாக பின்பற்றப்பட்டு வந்த கோட்டா சிஸ்டம்' முறைக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில், வட சென்னை மேற்கு - டில்லிபாபு, மத்திய சென்னை கிழக்கு - கராத்தே செல்வம், மத்திய சென்னை மேற்கு - எம்.எம்.டி.ஏ., கோபி, வட சென்னை கிழக்கு - மதரம்மா கனி, தென் சென்னை கிழக்கு - விஜயசேகர், தென் சென்னை மேற்கு - கே.வி.திலகர், தென் சென்னை மத்தி - ஜோதி பொன்னம்பலம் ஆகியோர் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

செங்கல்பட்டு வடக்கு - செந்தில்குமார், செங்கல்பட்டு தெற்கு - பிரபு, தஞ்சாவூர் வடக்கு - டி.குமரன், விருதுநகர் கிழக்கு - கிருஷ்ணமூர்த்தி உட்பட 68 புதிய முகங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேர்காணல் நடத்திய மேலிட பார்வையாளர் மீது, பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அந்த மாவட்டத்தில் மட்டும் மூன்று தலைவர்களுக்கான நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement