ஓரங்கட்டப்படும் பழனிமாணிக்கம்; தஞ்சை தி.மு.க.,வில் பரபரப்பு

3

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தி.மு.க., முன்னாள் எம்.பி., பழனிமாணிக்கம், கட்சியில் ஓரங்கட்டப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி, கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் ஒன்பது முறை போட்டியிட்டு, ஆறு முறை எம்.பி.,யாக வெற்றி பெற்ற பழனிமாணிக்கம், மத்திய நிதித் துறை இணையமைச்சராகவும் பதவி வகித்தார்.

கடந்த லோக்சபா தேர்தலில், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும், உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினராக இருந்து, கட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.

கடும் மோதல்



இந்நிலையில், தி.மு.க., மகளிரணி மாநாட்டுக்கான முன்னேற்பாடு குழுவில், பழனிமாணிக்கத்திற்கு எந்த பொறுப்பும் வழங்கப்படாமல், அவரை ஒதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இது, தஞ்சை தி.மு.க., வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2016 சட்டசபை தேர்தலில், பழனிமாணிக்கத்தின் தம்பி ராஜ்குமாருக்கு, ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், 'சீட்' வேண்டாம் என அவர் தெரிவித்ததையடுத்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக நடந்து கொண்டதாக விமர்சனம் எழுந்தது.

மேலும், தி.மு.க., உட்கட்சி தேர்தலில், ஒன்றிய செயலர் பொறுப்புக்கு முரசொலி எம்.பி., போட்டியிட்டபோது, பழனிமாணிக்கம் தன் ஆதரவாளரை அந்த பதவிக்கு கொண்டு வர முயன்றதால், கட்சிக்குள் கடும் மோதல் ஏற்பட்டது.

இதனால், பழனிமாணிக்கம் மீது கட்சி தலைமை அதிருப்தி அடைந்தது. இந்த பின்ன ணியில் தான், கடந்த லோக் சபா தேர்தலில், தஞ்சாவூரில் அவர் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.

வரும் சட்டசபை தேர்தலில், தன் தம்பிக்கு தஞ்சாவூர் தொகுதியை கேட்கும் முடிவில் இருக்கும் பழனிசாமியின் திட்டம் அறிந்து, கட்சி தலைமையே அவரை புறக்கணிப்பதாக கூறப்படுகிறது.

குரல் கொடுத்தவர்



சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடைபெற்ற தி.மு.க., முப்பெரும் விழாவில், 'உதயநிதியை துணை முதல்வராக கொண்டு வர வேண்டும்' என முதன்முறையாக குரல் கொடுத்தவர் பழனிமாணிக்கம்.

ஆனால், இன்றைய நிலையில், முன்னணி அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் அவரை தவிர்த்து வருவதோடு, தலைமையும் அவரை புறக்கணிப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

Advertisement