மக்கள் நலனில் அக்கறை உள்ளவராக கவர்னர் இருக்கணும்: முதல்வர் ஸ்டாலின்

80

சென்னை: கவர்னர் மக்கள் நலனில் அக்கறை உள்ளவராக இருக்க வேண்டும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.

தமிழக சட்டசபை கூடியதும் தேசிய கீதம் பாடாததால் கவர்னர் ரவி உரையை படிக்காமல் புறப்பட்டு சென்றார். ஆளும் திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக அரசின் உரையை வாசிக்காமல் கவர்னர் வெளியேறியது குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசியதாவது: மீண்டும் ஒரு முறை கவர்னர் சட்டவிதிகளையும், மரபுகளையும் மீறி செயல்பட்டு அவையில் இருந்து வெளியே சென்று இருக்கிறார். வெளியே என்று சொல்வதை விட வெளியேறி சென்று இருக்கிறார்.

பதவிக்கு அழகல்ல



கவர்னரின் செயல் அவர் அளிக்கூடிய பதவிக்கு அழகல்ல. இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 176ன் படி கவர்னர் உரை என்பது மாநில அரசால் தயாரிக்கப்படும் அறிக்கையை முழுமையாக படிக்க வேண்டிய ஒன்றாகும். இதில் கவர்னர் தனது சொந்த கருத்துக்களை தெரிவிப்பதற்கோ, மாநில அரசால் தயாரிக்கப்பட்டு அளிக்கப்பட்ட உரையில் நீக்கம் செய்யப்படுவதற்கோ அரசியலமைப்பு சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை. இருப்பினும் கவர்னர் விளக்கம் கேட்டு அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு பதிலும் அளிக்கப்பட்டு இருக்கிறது.



இந்த நிலையில் கவர்னர் வேண்டுமென்றே அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயலை செய்துள்ளார். கவர்னரின் செயல் என்று 100 ஆண்டு கால மரபையும், நீண்ட பாரம்பரியத்தை கொண்ட மக்கள் சபையையும் அவமதிக்கும் செயலாக கருதுகிறேன். கவர்னர் ஆர்என்ரவி ஏற்கனவே நடந்து கொண்டது போலவே, மீண்டும் இன்று செயல்பட்டது வருத்தம் அளிக்கிறது. கவர்னர் என்பவர் மாநில நலனின் அக்கறை கொண்டவராக, மக்கள் மேம்பாட்டில் ஆர்வம் கொண்வராக, உண்மையை பேசுபவராக இருக்க வேண்டும்.

முதல் பொறுப்பு



அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பவராக இருக்க வேண்டும். கவர்னர் மாறாக செயல்படுகிறார். மாநில நிர்வாகத்தை முடக்கவும், பொது மேடைகளில் அரசியல் பேசியும், அவதூறு பரப்பி வருகிறார். அது அவரது சொந்த விருப்பம் என்று கருதலாம். அந்த முயற்சியை இங்கும் செய்ய நினைப்பது ஏற்புடையது அல்ல. அவையின் புகழ் மங்கிடாத வகையில் பாதுகாத்து வந்த சான்றோர்களின் வழி தடத்தை பின்பற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. பாதுகாக்க வேண்டிய முதல் பொறுப்பு எனக்கு உள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம்:

* ஏற்கனவே உள்ள நடைமுறைகளை பின்பற்றி, தமிழக அரசால் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்ட கவர்னர் உரையை சட்டசபையில் படிக்காமல் சென்றதை அவை ஏற்கவில்லை.

* உரையை கவர்னர் படித்ததாக இப்பேரவை கருதுகிறது. கவர்னர் உரை மட்டும் அவைக்குறிப்பில் இடம்பெறும். வெளிநடப்பு இடம்பெறக்கூடாது.


* நாடு முழுவதும் மாநிலங்களின் சட்டசபைகளில் ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர்கள் உரை வாசிப்பு என்ற நடைமுறை இருந்து வருகிறது. இந்த நடைமுறையை விலக்க பார்லிமென்டில் வலியுறுத்துவோம். இதற்காக அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்வோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


நிறைவேற்றம்



கவர்னர் உரையை அவர் படித்ததாகவே கருதப்படும் என முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதற்கு அப்பாவுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

Advertisement