மத்திய அரசு ஊழியருக்கு எதிரான ஊழல் புகாரை மாநில போலீசார் விசாரிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்

14

புதுடில்லி: 'ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுகளில் சிக்கும், மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கு பதிந்து விசாரணை நடத்த மாநில போலீசாருக்கு அதிகாரம் இருக்கிறது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கு பதியும் முன்பாக, சி.பி.ஐ.,யிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமும் இல்லை என்றும் தெளிவு படுத்தியுள்ளது.


ராஜஸ்தானில், மத்திய அரசு ஊழியர் ஒருவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அம்மாநில லஞ்ச ஒழிப்புத் துறை அவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிந்தது.


இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், 'ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், மாநில லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தவோ, வழக்கு பதியவோ முழு அதிகாரம் இருக்கிறது' என தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வரையறை




இம்மனு, நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.


அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றச்சாட்டுகளை மாநில விசாரணை முகமையோ, மத்திய விசாரணை முகமையோ அல்லது வேறு விசாரணை முகமையோ விசாரிக்கலாம்.


அதற்கு ஊழல் தடுப்புச் சட்டத்தில் உள்ள 17வது பிரிவு வழிவகை செய்கிறது. எனினும், விசாரிக்கும் போலீஸ் அதிகாரி, குறிப்பிட்ட உயர் பதவியில் இருக்க வேண்டும் என்ற தகுதி மட்டுமே கூடுதலாக வரையறுக்கப்பட்டுள்ளது.


மற்றபடி, ஒரு மத்திய அரசு ஊழியருக்கு எதிராக சுமத்தப்படும் லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கிரிமினல் வழக்கு பதியவோ அல்லது விசாரணை நடத்தவோ மாநில போலீசார், மாநிலத்தின் சிறப்பு விசாரணை முகமைகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என, ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17ல் கூறப்படவில்லை.


மத்திய அரசு ஊழியருக்கு எதிரான லஞ்சம், ஊழல் வழக்குகளை சி.பி.ஐ., வசம் இருந்து மாநில போலீசாருக்கும், மாநில போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ., விசாரணைக்கும் ஒப்படைக்கப்பட்டே வருகிறது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களும், புலனாய்வுக்கு உட்பட்டவை தான்.

சரியானது




எனவே, மாநில போலீசார் அதை தாராளமாக விசாரிக்கலாம். வழக்கு பதியும் முன்பாக சி.பி.ஐ.,யிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமும் இல்லை. எனவே, இவ்வழக்கில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்கிறோம்.


ஒரு மத்திய அரசு ஊழியருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யும் அதிகாரம், சி.பி.ஐ.,க்கு மட்டுமே இருப்பதாக கூறுவது தவறு என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement