மாநில வளர்ச்சிக்கு பெருந்தடையாக உள்ளது மத்திய அரசு: தமிழக சட்டசபையில் குற்றச்சாட்டு

9

சென்னை: 'எதிர்மறை மனப்பான்மையுடன் மாநில அரசை, மத்திய அரசு அணுகி வருகிறது. இது, மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெருந்தடையாக உள்ளது' என, சட்டசபையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



சட்டசபையில் நேற்று, கவர்னர் உரையின் தமிழாக்கத்தை, சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அப்போது, அவர் கூறியதாவது:

* கிராமப்புற மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கு ம் வகையில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில், ஜல்ஜீவன் மிஷன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில், 1.12 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.


இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு, மத்திய அரசு விருது அளித்து பாராட்டியுள்ளது. இவ்வளவு சிறப்பாக தமிழக அரசு செயல்பட்டாலும், இத்திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய, 3,112 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒன்றரை ஆண்டுகளாக விடுவிக்கவில்லை


* மத்திய அரசு, எதிர்மறை மனப்பான்மையுடன், மாநில அரசை அணுகி வருகிறது. மாநில அரசுக்கு உரிய திட்டங்களுக்கான அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவது கவலைக்குரியது. தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களுக்கு, மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிரான நிபந்தனைகளை, மத்திய அரசு விதித்து, அவை முற்றிலும் முடங்கும் சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெருந்தடையாக உள்ளது


* ' மிக்ஜாம், பெஞ்சல்' புயல்கள் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால், தமிழகம் பெரும் சேதத்தை சந்தித்த நேரங்களில், மாநிலத்தின் நிவாரண உதவி கோரிக்கைகள் முழுமையாக ஏற்கப்படவில்லை. மிக சொற்பமான தொகையை மட்டுமே, மத்திய அரசு விடுவித்தது ஏமாற்றம் தருகிறது


* ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ், 3,548 கோடி ரூபாயை, மத்திய அரசு விடுவிக்காததால், அத்திட்டங்களுக்கு உரிய முழு செலவையும் மாநில அரசே ஏற்றுள்ளது


* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் அடிப்படை நோக்கத்தை சிதைக்கும் வகையில், விபி - ஜி - ராம் - ஜி என்ற புதிய திட்டத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த புதிய திட்டத்தால், தமிழகத்தின் நிதிச்சுமை மேலும், 5,000 கோடி ரூபாய் வரை அதிகரிக்கும்


* பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு இடையே, மத்திய அரசு உறுதியளித்தபடி, உரிய நேரத்தில் தனது பங்கை விடுவிக்கும் என எதிர்பார்த்து, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு, மாநில அரசு சொந்த நிதியை விடுவித்து வந்தது. இதனால், இரண்டு ஆண்டுகளாக மற்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது.


முதல்வரின் கோரிக்கை அடிப்படையில், இத்திட்டத்திற்கு 50 சதவீத மூலதன பங்கு வழங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்திற்கான நிதியை உரிய நேரத்தில் மத்திய அரசு விடுவித்தால், திட்ட பணிகள் குறித்த காலக்கெடுவிற்கு முன்னதாகவே முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement