நகர ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவுபடுத்த மக்கள் வலியுறுத்தல்

உடுமலை: உடுமலை நகர ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவுபடுத்தி, மருத்துவ கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை நகரில், 33 வார்டுகளில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

நகரில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் வகையில், நகராட்சி சார்பில் தாய் சேய் நல விடுதியாக துவக்கப்பட்டு, பின்னர் சுகாதாரத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

வக்கீல் நாகராஜன் வீதியில் அமைந்துள்ள இந்த நகர ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, தினமும், 1,300க்கும் மேற்பட்ட மக்கள் காய்ச்சல், தலைவலி, சர்க்கரை நோய் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை மருத்துவ சேவைக்காக வந்து செல்கின்றனர்.

மேலும், கர்ப்பிணிகள், பிரசவம், குழந்தை நலன் என பல்வேறு மருத்துவ சிகிச்சைக்காக பெண்களும் அதிகளவு வந்து செல்கின்றனர். குறுகிய பரப்பளவில் அமைந்துள்ளதால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் மருத்துவ பயனாளர்கள், குறுகிய வீதியில் காத்திருக்கும் நிலை உள்ளது.

வாகனங்கள் நிறுத்த முடியாத நிலையில், நெரிசல் மிகுந்த ரோட்டில், மருத்துவ சிகிச்சைக்காக பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

அதே போல், போதிய மருத்துவ வசதிகள், படுக்கை, ஆய்வகம் என மருத்துவ கட்டமைப்புகளும், தேவையான டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.

நெரிசல் மிகுந்த பகுதியில், குறுகிய பரப்பளவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவு படுத்தும் வகையில், பின்புறம் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தை வழங்க, கடந்தாண்டு நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட்டது. ஆனால், நகராட்சி ஒதுக்கிய இடத்தில், கூடுதல் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கவில்லை.

எனவே, சுகாதாரத்துறை அதிகாரிகள், தற்போதுள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பின்புறம், நகராட்சி ஒதுக்கியுள்ள இடத்தில் நகர ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டடம் கட்டவும், தேவையான மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement