பிரான்ஸ் தயாரிப்பு ஒயினுக்கு 200% வரி விதிப்பேன்: அதிபர் டிரம்ப் மிரட்டல்

22

வாஷிங்டன்: அதிபர் இம்மானுவேல் மேக்ரான் காசா அமைதி வாரியத்தில் இணையாவிட்டால், பிரான்ஸ் தயாரிப்பு ஒயின்களுக்கு 200% வரி விதிப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டியுள்ளார்.


இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் போரை முடிவுக்கு கொண்டு காசா அமைதி வாரியத்தை அதிபர் டிரம்ப் அமைத்து உள்ளார். இந்த வாரியத்தில் சேர பல நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் அழைப்புகளை அனுப்பி வருகிறார். இந்த வாரியத்தில் சேர பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மறுப்பு தெரிவித்துவிட்டார்.


இது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அதிபர் டிரம்ப் கூறியதாவது: யாரும் அவரை விரும்பவில்லை. ஏனென்றால் அவர் மிக விரைவில் பதவியில் இருந்து வெளியேற போகிறார். பிரான்ஸ் தயாரிப்பு ஒயின்களுக்கு 200 சதவீத வரி விதிப்பேன். பின்னர் அவர் தானாக அமைதி வாரியத்தில் இணைவார். இவ்வாறு டிரம்ப் கூறினார்.
இதற்கிடையே மேக்ரான் அனுப்பிய செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டையும் டிரம்ப் பகிர்ந்து கொண்டார்.


அதில் கிரீன்லாந்து தொடர்பான கருத்து வேறுபாடுகளை பற்றி விவாதிக்க G7 நாடுகள் கூட்டத்திற்கு அழைப்பு விடலாம் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முன்மொழிந்துள்ளார்.

அடுத்த திடுக்!



மற்றொரு பதிவில் டிரம்ப் கூறியிருப்பதாவது: திடுக்கிடும் விதமாக, நமது சிறந்த நேட்டோ கூட்டாளியான பிரிட்டன், அமெரிக்காவின் ஒரு முக்கிய ராணுவத் தளம் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவை, எந்தக் காரணமும் இல்லாமல் மொரிஷியஸுக்குத் தாரை வார்த்துக்கொடுக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த முழுமையான பலவீனமான செயலை சீனாவும், ரஷ்யாவும் கவனித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவை வலிமையை மட்டுமே அங்கீகரிக்கும் சர்வதேச வல்லரசுகள்.

அதனால்தான், எனது தலைமையின் கீழ், அமெரிக்கா இப்போது, ​​ஒரே ஒரு வருடத்திற்குள், முன்னெப்போதையும் விட அதிக மரியாதையைப் பெற்றுள்ளது. மிகவும் முக்கியமான நிலப்பகுதியை ஐரோப்பா தாரை வார்த்துக்கொடுப்பது ஒரு பெரும் முட்டாள்தனமான செயலாகும். கிரீன்லாந்தை நாம் ஏன் கையகப்படுத்த வேண்டும் என்பதற்கான தேசிய பாதுகாப்பு காரணங்களின் நீண்ட பட்டியலில் இதுவும் ஒன்றாகும். டென்மார்க்கும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் சரியானதைச் செய்ய வேண்டும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

படம் வெளியிட்டு அதிரடி!



கிரீன்லாந்து தீவில் அமெரிக்கா கொடியுடன் நிற்கும் புகைப்படத்தை அதிபர் டிரம்ப் வெளியிட்டு இருக்கிறார்.

அதேபோல் வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஆய்வு செய்யும் படத்தை டிரம்ப் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவில் கனடா அமெரிக்கா ஆக்கிரமித்து இருப்பது போல் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.

Advertisement