கவர்னரை விமர்சனம் செய்வது முறையல்ல; இபிஎஸ்

7


சென்னை: திமுக அரசு செய்த தவறை, சரி என்று அறிக்கை வாசிக்கை மறுக்கும் கவர்னர் பற்றி விமர்சனம் செய்வது முறையல்ல என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு எனக் கூறி சட்டசபையில் இருந்து அதிமுக, பாஜ எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அவையில் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டசபை வளாகத்தில் நிருபர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியதாவது:


இந்தியாவின் தற்கொலை தலைநகராக தமிழகம் மாறியுள்ளதாக கவர்னர் கூறியுள்ளார். அமைச்சரவை தயாரித்து வழங்கிய உரையில் உள்ள தவறை கவர்னர் சுட்டிக்காட்டுகிறார். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்பட்டது. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது.


போதைப்பொருள்




கடந்த நான்கரை ஆண்டு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. எல்லா தொலைக் காட்சியிலும், பத்திரிகையிலும் கொலைகள் குறித்த செய்திகள் தான் வெளியாகுகிறது. அந்த அளவுக்கு மோசமான சூழல் தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கிறது. இன்று தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக உருவாகி விட்டது.



இந்த போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று பலமுறை இந்த அரசை வலியுறுத்தியும், இந்த அரசு செவி சாய்க்காமல் இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்காத காரணத்தினால் இன்றைய தினம் தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போதைக்கு அடிமையாகி கடும் குற்றச்செயலில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட மோசமான ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

முதல்வரின் கருத்து




முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இருக்கும் ஆட்சி ராஜினாமா செய்ய வேண்டும் வலியுறுத்தி நாங்கள் வெளிநடப்பு செய்து இருக்கிறோம். கவர்னர் வெளியிட்டு இருக்கும் அறிக்கை எல்லாம் உண்மை தான். கவர்னர் உரையில் திமுக அரசு தவறான கருத்தை திணிக்கப் பார்க்கின்றனர். கவர்னர் உரையில் முதல்வரின் கருத்துகளும் உள்ளன.


தமிழகத்தில் நடக்கும் உண்மை செய்திகளை கவர்னர் உரையில் இடம்பெற வையுங்கள். நான் படிக்கும் போது நீங்கள் செய்த தவறை சரி என்று படிக்க மாட்டேன். வாசிக்க மாட்டேன் என்று கவர்னர் ரவி சொல்கிறார். இதுதான் பிரச்னை. கவர்னர் குறித்து விமர்சனம் செய்வது முறையல்ல. அதிமுக அதனை செய்தது இல்லை. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

Advertisement