உரையை முழுமையாக வாசிக்கவில்லை: கவர்னர் மீது கேரள முதல்வர் குற்றச்சாட்டு

4


திருவனந்தபுரம் : கேரளாவில், கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் துவங்கிய நிலையில், ''மாநில அரசின் கொள்கை விளக்க உரையில் இருந்த சில பகுதிகளை, கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வேண்டுமென்றே வாசிக்கவில்லை,'' என, முதல்வர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

முக்கியத்துவம்



கேரளாவில்,வரும் ஏப்ரலில், தமிழகத்துடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த பரபரப்பான சூழ்நிலைகளுக்கு இடையே, கேரள சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் இன்று (ஜனவரி 20) துவங்கியது. தேர்தலுக்கு முன் நடக்கும் கடைசி கூட்டத்தொடர் என்பதால், முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கேரள அரசு தயாரித்து கொடுத்த உரையை, கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வாசித்தார். இதில் சில பகுதிகளை அவர் வேண்டுமென்றே தவிர்த்ததாகவும், சில வார்த்தைகளை திருத்தி வாசித்ததாகவும் கூறப்படுகிறது.


கவர்னர் உரை முடிந்ததும், முதல்வர் பினராயி விஜயன் சட்டசபையில் பேசியதாவது:மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்த கொள்கை விளக்க உரையை, கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முழுமையாக வாசிக்கவில்லை.பா.ஜ., தலைமையிலான மத்திய அரசின் நிதி கொள்கையை விமர்சிக்கும் பகுதிகள் மற்றும் கவர்னர் மாளிகையில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்த குறிப்புகளை அவர் வேண்டுமென்றே தவிர்த்துள்ளார். மொத்தம் 72 பக்க உரையில், சில பகுதிகளில் தானாகவே சில வார்த்தைகளை அவர் சேர்த்துள்ளார்.


குறிப்பாக, 16-வது பத்தியில், 'வரிப்பகிர்வு மற்றும் நிதிக்குழு மானியங்கள், மாநிலங்களின் அரசியலமைப்பு உரிமை.அவை தானமாக வழங்கப்படுபவை அல்ல' என்ற வாக்கியத்தின் துவக்கத்தில், 'கேரள அரசு கருதுகிறது' என்ற வார்த்தைகளை அவர் சேர்த்துள்ளார். உரையில் இல்லாத வார்த்தைகளை அவர் வாசித்துள்ளார்.


கடந்த கால நடைமுறைஅமைச்சரவை ஒப்புதல் அளித்த உரையை அதிகாரப்பூர்வமானதாக கருத வேண்டும். கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தவிர்த்த பகுதிகளை உள்ளடக்கியும், அவர் சேர்த்த பகுதிகளை நீக்கியும் உரையை சபைக் குறிப்பில் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர், ''அமைச்சரவை ஒப்புதல் அளித்த கொள்கை விளக்க உரையே சபைக் குறிப்பில் பதிவு செய்யப்படும். அதுவே கடந்த கால நடைமுறை,'' என்றார்.

Advertisement