துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு: உ.பி., வருவாய் துறை அதிகாரி வீட்டில் அதிர்ச்சி!

சஹாரன்பூர்: உ.பி.,யில் வருவாய் துறை அதிகாரி உள்ளிட்ட 5 பேர் தலைப்பகுதியில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசம் நகுர் வட்டத்தில் வருவாய் துறை அதிகாரியாக பணியாற்றி வந்த அசோக் ரதி 40, மனைவி அஜந்தா 37, தாய் வித்யாவதி 70, அவரது மகன்கள் கார்த்திக் 16, தேவ் ஆகியோருடன் குடும்பத்துடன் சஹாரன்பூரில் உள்ள கவுசிக் காலனியில் வசித்து வந்த நிலையில் இன்று (ஜனவரி 20) அவர்களிடம் அவரது உறவினர்கள், போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் போனில் அழைத்தும் யாரும் எடுக்காததால் சந்தேகம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அண்டை வீட்டாரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டின் மாடியில் உள்ள ஒரு ரூமில் ஐந்து பேரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.


இந்த சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஆஷிஷ் திவாரி கூறியதாவது:சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது, ஐந்துபேரும் சடலமாக கிடந்தனர். அசோக் ரதியின் உடலுக்கு அருகில் மூன்று நாட்டு துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன. அசோக் தனது குடும்ப உறுப்பினர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்கிறார்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அஷிஷ் திவாரி கூறினார்.

Advertisement