சட்டசபையில் வாசிக்க கொடுத்த அறிக்கையில் நிறைய 'புருடா!': விளக்கினார் கவர்னர் ரவி

40

சென்னை: சட்டசபையில் தனக்கு படிக்க கொடுத்த அறிக்கையை, 'புருடா' எனக்கூறும் விதமாக, 13 குற்றச்சாட்டுகளை கவர்னர் ரவி வரிசைப்படுத்தி உள்ளார். அந்த உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்த 20வது நிமிடத்தில் வெளியான அவரது விளக்கத்தில், இந்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன.



தமிழக சட்டசபையில், அரசு தயாரித்து அளித்த உரையை வாசிக்காமல், காலை 9:35 மணிக்கு கவர்னர் ரவி வெளியேறினார். தமிழக அரசு தயாரித்து தந்த உரையை கவர்னர் வாசிக்க மறுத்ததற்கான காரணங்களை பட்டியலிட்டு, கவர்னர் மாளிகை தரப்பில் காலை 9:55 மணிக்கு, அறிக்கை வெளியானது.



அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* கவர்னர் இருக்கையில் பொருத்தப்பட்டிருந்த 'மைக்' கவர்னர் பேசும்போது மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டது; அவர் பேச அனுமதிக்கப்படவில்லை

* கவர்னருக்கான உரையில் ஆதாரமற்ற, தவறான தகவல்கள் இடம் பெற்றிருந்தன. மக்களை பாதிக்கும் பல்வேறு முக்கிய பிரச்னைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன

* தமிழகம், 12 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பெரும் முதலீடுகளை ஈர்த்துள்ளது என்ற கூற்று உண்மைக்கு எட்டாத தொலைவில் உள்ளது. முதலீட்டாளர்களுடனான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகித அளவிலேயே உள்ளன. உண்மையான முதலீடு அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே. முதலீட்டாளர்களுக்கு தமிழகம் ஈர்ப்பில்லாத மாநிலமாக மாறி வருவதை, முதலீட்டுத் தரவுகள் காட்டுகின்றன.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, அன்னிய நேரடி முதலீட்டை பெறுவதில் தமிழகம் நான்காவது பெரிய மாநிலமாக இருந்தது. இன்று, ஆறாம் இடத்தில் நீடிக்கவே போராடுகிறது

* 'போக்சோ' பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், 55 சதவீதத்திற்கும் மேலாகவும், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் சம்பவங்கள், 33 சதவீதத்திற்கு மேலாகவும், அபாயகரமாக அதிகரித்துள்ளன. பெண்களின் பாதுகாப்பு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது

* பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே, போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் பழக்கமும், போதைப்பொருள் தொடர்பான வழக்குகளும் அதிகரித்து வருவது கவலைக்குரியது. போதைப்பொருள் பழக்கத்தால், ஒரே ஆண்டில் 2,000 பேர் தற்கொலை செய்துள்ளனர்; இது, உரையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது

* தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள், தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, கடுமையாக அதிகரித்து வருகின்றன. இது முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது

* தமிழகத்தில் ஒரே ஆண்டில் 20,000 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதாவது, தினமும் 65 தற்கொலைகள். தமிழகம், இந்தியாவின் தற்கொலை தலைநகரமாகி உள்ளது. இது, அரசுக்கு ஒரு கவலையாக தெரியவில்லை

* கல்வி தரத்தில் தொடர்ச்சியான சரிவு, கல்வி நிறுவனங்களில் பரவலான நிர்வாக சீர்கேடு, நம் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கின்றன. ஆசிரியர் பணியிடங்கள், 50 சதவீதத்திற்கும் மேல் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. இது, அரசுக்கு ஒரு கவலையாகத் தெரியவில்லை

* பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால், கிராம ஊராட்சிகள் செயலிழந்து கிடக்கின்றன. கோடிக்கணக்கான மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இவை, அரசியலமைப்பின் எழுத்துக்கும் உணர்வுக்கும் எதிரானவை. கிராம ஊராட்சிகளை மீட்டெடுக்க மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதை உரையில் குறிப்பிடவில்லை

* மாநிலத்தில் ஆயிரக்கணக்கான கோவில்கள், அறங்காவலர் குழுக்கள் இல்லாமல் மாநில அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படுகின்றன. கோவில்களின் தவறான நிர்வாகத்தால் பக்தர்கள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர். பழங்கால கோவில்களை மீட்டெடுப்பது மற்றும் பாதுகாப்பது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் முக்கிய வழிகாட்டுதல்கள், ஐந்து ஆண்டுகளைக் கடந்தும் செயல்படுத்தப்படவில்லை


* தொழிலை நடத்துவதற்கு, வெளிப்படையான மற்றும் மறைமுக செலவுகள் காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரும் அழுத்தத்தில் உள்ளன. இது, வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்கு மிக முக்கியமான துறையாகும்.


எனினும், நாட்டில் 5.50 கோடிக்கு அதிகமான பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ள நிலையில், வளர்ச்சி சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், தமிழகத்தில் 40 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர், தங்கள் நிறுவனங்களை மற்ற மாநிலங்களில் அமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர். இந்த விவகாரம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது
* அனைத்து துறைகளிலும் கீழ்மட்ட ஊழியர்கள் இடையே பரவலான அதிருப்தி நிலவுகிறது. அவர்கள் அமைதி அற்றவர்களாக விரக்தியுடன் உள்ளனர். அவர்களின் நியாயமான குறைகளை தீர்ப்பதற்கான வழிகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை

* தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது. அடிப்படை அரசியலமைப்பு கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement