அதிக பருத்தி கொள்முதல்; தட்டுப்பாட்டை தவிர்க்க முடிவு: வேகம் காட்டுகிறது இந்திய பருத்தி கழகம்

திருப்பூர்: நடப்பு பருத்தி சீசனில், கடந்த மூன்றரை மாதங்களில், 4.16 கோடி குவின்டால் பருத்தியை, விவசாயிகளிடம் இருந்து இந்திய பருத்தி கழகம் கொள்முதல் செய்துள்ளது.



மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் ஓர் அங்கமாக, இந்திய பருத்திக்கழகம் இயங்கி வருகிறது. விவசாயிகளுக்கு, பருத்திக்கான குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி செய்யும் நோக்குடன் செயல்படுகிறது. உள்நாட்டு பஞ்சு தேவையை பூர்த்தி செய்வதும் முக்கிய பணியாக இருக்கிறது.


அக்., முதல் அடுத்த ஆண்டு செப்., வரை பருத்தி ஆண்டு கணக்கிடப்படும் நிலையில், கடந்த அக்டோபரில் துவங்கியதில் இருந்து, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பருத்தி கொள்முதல் துவங்கியுள்ளது.


நடப்பு சீசனில், முந்தைய ஆண்டுகளை காட்டிலும் பருத்தி மகசூல் குறையும் என்று கணிக்கப்பட்டதால், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய, பஞ்சு இருப்பு வைக்கும் பணியை இந்திய பருத்திக்கழகம் துவங்கியுள்ளது. கடந்த 16ம் தேதி வரை, 4.16 கோடி குவின்டால் கொள்முதல் நடந்துள்ளது.



இது குறித்து தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், ''பஞ்சு இறக்குமதிக்கான வரிவிலக்கு சலுகையை மேலும் சில மாதங்கள் நீட்டித்தால், பஞ்சு தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும்'' என்றார்.

Advertisement