டி-20 உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா வர வங்கதேச அணி மீண்டும் மறுப்பு

டாக்கா: 'இந்தியாவில் நடக்கவுள்ள 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம்,'' என வங்கதேச அணி மீண்டும் தெரிவித்துள்ளது.


வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான மனநிலை நிலவுகிறது. இதையடுத்து, வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான், கோல்கட்டா பிரிமியர் லீக் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.இதற்கு பதிலடியாக, 'டி-20' உலக கோப்பை தொடரில் (பிப்.7-மார்ச் 8, 2026) பங்கேற்க, இந்தியா வர, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) மறுத்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) வேண்டுகோள் விடுத்தது.


ஆனால் 'ஏற்கனவே அட்டவணை முடிவு செய்யப்பட்டு விட்டதால், போட்டிகளை மாற்ற முடியாது. ஜன. 21க்குள் இறுதி முடிவு எடுக்க வேண்டும்,' என ஐ.சி.சி., தெரிவித்தது. வங்கதேச அணி தனது முடிவில் இருந்து பின்வாங்க மறுத்தது.

ஆதரவு யாருக்கு



இதையடுத்து நேற்று ஐ.சி.சி., நிர்வாக கூட்டம் இணையதளம் வழியாக நடந்தது. முழு உறுப்பினர் அந்தஸ்து பெற்ற இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட அனைத்து 16 அணிகளின் கிரிக்கெட் போர்டு தலைவர்கள் இதில் பங்கேற்றனர். பி.சி.சி.ஐ., சார்பில் செயலர் தேவாஜித் சைகியா பங்கேற்றார்.


அப்போது, வங்கதேச முடிவை ஏற்க மறுத்த ஐ.சி.சி., 'இந்தியாவில் நடக்கும் 'டி-20' உலக கோப்பை தொடருக்கு செல்ல மறுத்தால், புதிய அணி சேர்க்கப்படும்,' என்ற விபரத்தை, வங்கதேச அரசிடம் தெரிவிக்குமாறு, பி.சி.பி.,யிடம் கூறியது.


இதைத் தொடர்ந்து ஓட்டுப்பதிவு நடந்தது. மாற்று அணியை தேர்வு செய்ய வேண்டும் என்ற ஐ.சி.சி., முடிவுக்கு ஆதரவாக 14 பேர் ஓட்டளித்தனர். 2 பேர் எதிராக ஓட்டு பதிவு செய்தனர். இருப்பினும், வங்கதேச அணி முடிவெடுக்க, கூடுதலாக இன்று ஒருநாள், கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதித்த கெடு முடிவடைய உள்ள நிலையில் வங்கதேச விளையாட்டுத்துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், கிரிக்கெட் வாரிய தலைவர் அமினுல் இஸ்லாம் மற்றும் உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பங்கேற்ற அவசரக் கூட்டம் டாக்காவில் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தியாவில் விளையாடுவதற்கு தேவையான அனுமதி கிடைக்கவில்லை. மேலும் வீரர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி இந்தியா செல்வதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மீண்டும் ஒரு முறை வங்கதேசம் பங்கேற்கும் போட்டிகளை இலங்கைக்கு மாற்றக்கோரி ஐசிசி உடன் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு திட்டமிட்டு உள்ளது.

வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல் கூறியதாவது: கோல்கட்டா அணியில் இருந்து முஸ்தாபிசுர் ரஹ்மான்நீக்கப்பட்டது தனிப்பட்ட நிகழ்வு கிடையாது. ஐசிசி உடன் தொடர்ந்து தொடர்பில் இருப்போம். உலகக் கோப்பை தொடரில் விளையாட ஆர்வமாக இருக்கிறோம். ஆனால், இந்தியாவில் விளையாட விரும்பவில்லை. இந்தியா தன்னிச்சையாக முடிவு செய்கிறது. இந்தியாவில் இருந்து போட்டிகளை மாற்ற வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துவிட்டது. உலக கோப்பை தொடரின் நிலை பற்றி தெரியவில்லை. 20 கோடி மக்களை அப்போட்டி சென்றடையவில்லை. ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் இடம்பெறுகிறது. ஆனால், நாங்கள் அதில் பங்கேற்க முடியாவில்லை என்றால், அது ஐசிசியின் தோல்வி. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement