குடியரசு தின அணிவகுப்பு ஏற்பாடுகள் தீவிரம்; சிந்தூர் அமைப்பில் போர் விமானங்கள் பறக்கும்!

புதுடில்லி: வரவிருக்கும் குடியரசு தின அணிவகுப்பில் 29 விமானங்கள் இடம்பெறும், அவற்றில் ஏழு போர் விமானங்கள் சிந்தூர் என்ற அமைப்பில் பறக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


குடியரசு தின விழா வரும் 26ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் டில்லியின் கர்தவயா பாதையில், நாட்டின் ராணுவ வலிமை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் அணிவகுப்பு நடைபெற உள்ளது.


அணிவகுப்பில் 29 விமானங்கள் இடம்பெறும், அவற்றில் ஏழு போர் விமானங்கள் சிந்தூர் என்ற அமைப்பில் பறக்கும். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை
தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நான்கு நாள் ராணுவ மோதலான ஆப்பரேஷன் சிந்தூரில் இந்திய விமானப்படையின் பங்கை சித்தரிக்கிறது.


இரண்டு ரபேல் விமானங்கள், இரண்டு மிக்-29 விமானங்கள், இரண்டு சுகோய்-30 விமானங்கள் மற்றும் ஒரு ஜாகுவார் ஆகியவை அடங்கும். அணிவகுப்பின் சிறப்பம்சமாக இருக்கும் இந்த வான்வழி காட்சி, குடியரசு தின அணிவகுப்பின் போது முதல் முறையாக இரண்டு தொகுதிகளாக நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


குடியரசு தின விழாவில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்வார்கள். இதனால் டில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement