அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது பிடிக்கவில்லையா? பழனிசாமிக்கு முதல்வர் எதிர்ப்பு

9

சென்னை: “அரசு ஊழியர்களின் 23 ஆண்டு கால பிரச்னையை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம். அதனால், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர்,” என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:




அ.தி.மு.க., - தங்கமணி: அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்: அரசு ஊழியர்கள் போராடுவதை அக்கறையோடு தங்கமணி குறிப்பிட்டார். இந்த அக்கறை, உங்கள் ஆட்சியில் ஏன் இல்லை?

அரசு ஊழியர்கள் போராடுவது அவர்களின் உரிமை. அவர்களின் போராட்டத்தை முடிக்க வேண்டும் என, அமைச்சர்கள் எத்தனையோ முறை அழைத்து பேசினர். எல்லா பிரச்னைகளையும் முழுக்க தீர்க்கவில்லை என்று சொன்னாலும், 95 முதல் 99 சதவீதம் தீர்த்து வைத்திருக்கிறோம்.

நாங்கள், 'டெஸ்மா, எஸ்மா' என சட்டம் கொண்டு வரவில்லை. இரவோடு இரவாக கைது செய்யவில்லை; சிறையில் அடைக்கவில்லை.

இதெல்லாம் அ.தி.மு.க., ஆட்சியில் நடந்தன. பழனிசாமி முதல்வராக இருந்தபோது, அரசு ஊழியர்கள் எந்தெந்த வகையில் சம்பளம் வாங்குகின்றனர் என்பதை கொச்சைப்படுத்தி பேசியதை, இந்த நாடு மறந்துவிடவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: நாங்கள் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை. தேர்தல் நேரத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதாக சொன்னீர்கள். இப்போது புதிய திட்டத்தை அறிவித்து உள்ளீர்கள்.

அதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்: கடந்த 23 ஆண்டு கால பிரச்னையை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம். அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர். அந்த மகிழ்ச்சி உங்களுக்கு பிடிக்கவில்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement