இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்; ஐரோப்பிய ஒன்றியத்தை குறை கூறும் அமெரிக்கா

14

வாஷிங்டன்: உக்ரைன் மக்களை விட வர்த்தக நலனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக அமெரிக்கா விமர்சித்துள்ளது.



பல ஆண்டுகளாக நடந்து வந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஜனவரி 27ம் தேதி கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை 'அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய்' என்று ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் பெருமையாக கூறியுள்ளார்.


2027ம் ஆண்டு அமலுக்கு வரும் இந்த ஒப்பந்தத்தின் மூலம், பெரும்பாலான பொருட்களுக்கு இருநாடுகளும் வரிவிலக்கு அளிக்கும். இந்தியாவுக்கு 50 சதவீதம் கூடுதல் வரியை அமெரிக்கா விதித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்த ஒப்பந்தம், இந்திய வர்த்தகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.


இதனிடையே, இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான இந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு அதிருப்தியடையச் செய்துள்ளது. இந்த நிலையில், உக்ரைன் மக்களை விட வர்த்தக நலனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக அமெரிக்க கருவூல அமைச்சர் ஸ்காட் பெசென்ட் விமர்சித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது; ஐரோப்பிய ஒன்றியம் தங்களுக்கு எது சிறந்ததோ, அதை செய்ய வேண்டும். ஆனால், தற்போதைய செயல் (இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம்) எனக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் எங்களுடன் இணைய விரும்பவில்லை.


அதற்கு காரணம், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை செய்ய விரும்பியது தான். ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நடவடிக்கை உக்ரைன் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வலுவிழக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement