ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு; விமான சேவைகள் பாதிப்பு... தேசிய நெடுஞ்சாலை மூடல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை முதலே கனமழையும், கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இதனால் ஜம்மு-ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. ராம்பன் மாவட்டத்தில் உள்ள ராம்சூ பகுதியிலும் சாலைகளில் வெள்ளைப் போர்வை போர்த்தியது போன்று பனி குவிந்து கிடப்பதால், தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. மேலும் வீடுகளின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள், பனியால் மூடப்பட்டன.


சுமார் 3 மாத வறண்ட காலநிலைக்குப் பிறகு, தோடாவின் பலேசாவில் சமவெளிகள் மற்றும் மலைப்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இதேபோல, பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான சேவைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இண்டிகோ உள்ளிட்ட பல நிறுவனங்களின் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இது தொடர்பாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்ரீநகரில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக விமானங்கள் தரை இறங்குவதும், புறப்படுவதும் தாமதமாகின்றன. எனவே, பயணிகள் தங்கள் விமானத்தின் நிலை அறிந்து விமான நிலையம் வர வேண்டும்," என தெரிவித்துள்ளது.

Advertisement