சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கம் திருட்டு விவகாரம்; நடிகர் ஜெயராமிடம் விசாரணை

9


சென்னை: சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கம் திருட்டு விவகாரம் தொடர்பாக, சென்னையில் நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது.


சபரிமலை ஐயப்பன் கோவிலின் துவாரக பாலகர் சிலைகளின் தங்கக் கவசத்தில் இருந்து 4.54 கிலோ தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வரும் நிலையில், தேவசம் போர்டின் முன்னாள் தலைவர், தங்க முலாம் பூசுவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தங்கத் திருட்டு வழக்கில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததற்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவினர் துரிதப்படுத்தியுள்ளனர்.


இந்த நிலையில், இன்று நடிகர் ஜெயராமிடமும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். சபரிமலை துவார பாலகரின் சிலையில் இருந்த தங்கக்கவசம், தங்க முலாம் பூசுவதற்காக சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதன் அடிப்படையில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கம் திருட்டு விவகாரம் தொடர்பாக நடிகர் ஜெயராமிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement