வாரிசு அரசியல் என்பது இத்துப்போன குற்றச்சாட்டு; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

81


சென்னை: வாரிசு அரசியல் என்பது எங்களை களத்தில் எதிர்க்க முடியாதவர்கள் சொல்லும் இத்துப்போன குற்றச்சாட்டு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னையில் நடந்த கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்திய அரசியலில் தனித்துவமான மாடல் திராவிட மாடல். தமிழகத்திற்கும் மற்ற மாநிலங்களுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்திருப்பீர்கள். தமிழகத்தில் 2ம் நிலை, 3ம் நிலை நகரங்கள் கூட வளர்ந்துள்ளன.


திறமையான ஆட்சி நடத்துவதால் தான் இந்தியாவில் யாரும் அடைய முடியாத 11.19 சதவீதம் வளர்ச்சியை தமிழகம் எட்டியுள்ளது. சமூகத்தில் எந்த பிரிவிரும் தனித்துவிடக்கூடாது என்பதால் தான் திமுக பார்த்து பார்த்து திட்டங்களை செய்கிறது. தேவைகளுக்கு ஏற்ப திமுக கொள்கைகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

திட்டங்கள்




திமுக சொன்னால் சொன்னதை செய்யும் என்று மக்கள் நம்பிக்கையுடன் ஓட்டளித்தனர். மகளிர் உரிமைத் தொகையாக இதுவரை ரூ.33,461 கோடி வழங்கியுள்ளோம். விடியல் பஸ் பயண திட்டத்தில் 13,387 கோடி மதிப்பிலான பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர். திமுக ஆட்சி கொண்டு வந்துள்ள திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன.


நாட்டுக்கே வழிகாட்டி திராவிட மாடல் ஆட்சி என்பதற்கான அடையாளம் மற்ற மாநிலங்கள் எங்கள் திட்டங்களை பின்பற்றுவது தான். நாட்டிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனக்கு மகிழ்ச்சி




புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களின் பள்ளி இடைநிற்றலை தவிர்க்க புதிய திட்டத்தை திமுக அரசு தீட்டி வருகிறது. 2.15 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.


மாநிலத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். எதிர்க்கட்சிகளால் முடியாது என்று சொல்லப்பட்ட திட்டங்களை கூட நிறைவேற்றி உள்ளோம். தமிழகத்தின் திட்டங்கள் நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று சேர்ந்து மக்கள் பயன் அடைவதால் அதுவே எனக்கு மகிழ்ச்சி.

ஆதாரம் இருக்கா?



நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். தமிழகமும், கட்சிகளும் தேர்தல் களத்திற்கு மும்முரமாக தயாராகி வருகின்றன. தமிழகத்தில் ஊரக பகுதிகள் கூட வளர்ச்சி அடைந்துள்ளன. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் நம்பிக்கையை பெற்றால் தான் வெற்றி பெற முடியும்.



வாரிசு அரசியல் என்பது எங்களை களத்தில் எதிர்க்க முடியாதவர்கள் சொல்லும் இத்துபோன குற்றச்சாட்டு. இதுவரை எங்களது மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா உங்களிடம்? கற்பனை குற்றச்சாட்டுகளை கூறி எங்கள் மீது அவதூறுகளை பரப்பி வருகின்றனர். பாஜவுடன் இருப்பவர்கள் எல்லாருமே ஊழல்வாதிகள் தான்.

துரோக கூட்டணி




பாஜ வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்துடன் நான் பதிலளித்துவிட்டேன். எனது கேள்விகளுக்கு எப்போது பதில் அளிப்பீர்கள்? எங்களின் எந்த கேள்விக்கும் பாஜவிடம் இருந்து பதில் வராது. தமிழகத்திற்கு பாஜ செய்த துரோகங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தமிழகத்தில் தேஜ கூட்டணி என்ற பெயரில் பாஜ உருவாக்கி இருக்கும் கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது.


அது முழுக்க, முழுக்க கட்டாயத்திற்கும் ஒரு சிலரின் சுயநலத்திற்கும் கூடியுள்ள துரோக கூட்டணி அது. நடக்கும் போகும் தேர்தல் தமிழகம் VS என்டிஏ என்று நான் அழுத்தம் திருத்தமாக சொல்லி கொண்டு இருக்கிறேன். என்டிஏவுக்கு வரும் தேர்தலில் தமிழகம் தோல்வி என்ற பதிலடியை நிச்சயம் வழங்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement