எரிவாயு தகன மேடையை அகற்ற கோரிய வழக்குகள் தள்ளுபடி
-நமது நிருபர்-
ஈஷா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டு உள்ள எரிவாயு தகன மேடையை அப்புறப்படுத்த கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், ஈஷா அறக்கட்டளை சார்பில், 'காலபைரவர்' தகன மண்டபம் என்ற பெயரில், இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் எரிவாயு தகன மேடை அமைக்கப் படுகிறது. குடியிருப்பு, நீர்நிலைகள் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இந்த எரிவாயு தகன மேடையை அகற்ற கோரியும், இதை கட்ட கிராம பஞ்சாயத்து வழங்கிய அனுமதியை ரத்து செய்ய கோரியும், அதே கிராமத்தை சேர்ந்த எஸ்.என்.சுப்பிரமணியன் மற்றும் எஸ்.டி.சிவஞானம், முருகம்மாள் உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து இடுகாடு மற்றும் சுடுகாடு விதி களில், குடியிருப்பு அல்லது குடிநீர் வினியோக ஆதாரத்தில் இருந்து, 90 மீட்டர் தொலைவில், மயானம் அமைக்க உரிமம் வழங்குவதற்கு தடை இல்லை. மாறாக, கிராம பஞ்சாயத்திடம் உரிமம் பெறுவது மட்டுமே நிபந்தனையாக உள்ளது.
தகன மண்டபம் கட்டுவது, சமூகத்துக்கு பயன்படும். அது, பொது நலனுக்கு எதிரானது என கூற முடியாது. மேலும், இந்த விவகாரம் புதிதாகப் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. இந்த நீதிமன்றத்தின் முழு அமர்வு அளித்த தீர்ப்பின் வாயிலாக, இது ஏற்கனவே முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டது என்பதால், மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
மதுரை சிறுமியை கடத்தி பலாத்காரம் 'மிஸ்டு கால்' காதலால் விபரீதம்
-
துப்பாக்கியை காட்டி மிரட்டிய அ.தி.மு.க., நிர்வாகிக்கு 'காப்பு'
-
வேன் - லாரி மோதி இருவர் பலி
-
போலி தொழுநோய் சான்றிதழ் வழங்கி ஆசிரியரான 27 பேர் மீது விசாரணை?
-
ரூ.2.99 கோடி கையாடல் 2 அலுவலர்கள் சிக்கினர்
-
குமரியில், 1,000 மெகாவாட் நீரேற்று மின் உற்பத்தி திட்டம்