தெருநாய் வழக்கில் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு; தீர்ப்பு ஒத்திவைப்பு

5


புதுடில்லி: தெரு நாய் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட், ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்திவைத்தனர்.



தலைநகர் டில்லியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வந்த நிலையில், அது தொடர்பாக தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. கடந்த வாரம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'நாய்க்கடி மரணங்களுக்கு நாய் பிரியர்கள், அதற்கு உணவு அளிப்பவர்களையும் பொறுப்பாக்கி, அபராதம் வசூலிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்திருந்தது.


நாய் பிரியர்கள், நாய் கடித்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள், விலங்கு உரிமை ஆர்வலர்கள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்காக ஆஜரான வழக்கறிஞர்கள் உட்பட அனைத்து தரப்பு வாதங்களையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு கேட்டனர்.


விசாரணையை முடித்த பின்னர், சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கில் தனது தீர்ப்பை ஒத்திவைத்தது. மேலும், அனைத்து தரப்பினரும் ஒரு வாரத்திற்குள் தங்கள் எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement