முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்; சிவகாசி முன்னாள் ராணுவ வீரர் கைது

சிவகாசி: முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக சென்னை போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு அலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாலமுருகனை 40, சென்னை போலீசார் கைது செய்தனர்.

சென்னை போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக ஜன.,25 ல் மர்ம நபர் அலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சென்னை தேனாம்பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர். அலைபேசி எண்ணை வைத்து சிவகாசி அருகே பூவநாதபுரத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாலமுருகனை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

போலீசார் கூறுகையில், மேற்கு வங்கத்தில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த பாலமுருகன் 2018 ல் ஓய்வு பெற்றார். 2020 ல் குரூப் 4 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் இளநிலை உதவியாளராக பணி புரிந்தார்.

தொடர்ந்து கோயம்புத்துார் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் வேலை பார்த்த இவர் 2022 முதல் வேலைக்கு செல்லாமல் தனது ஊரில் இருந்தார். இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் அவரது மனைவி 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றார். ஊரில் தனியாக வசித்து வந்த பாலமுருகன் அவ்வப்போது அருகில் உள்ளவரிடம் சண்டை போட்டதில் 4 மாதங்களுக்கு முன்பு மல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜன., 24 வரை ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார்.

இவர் அவ்வப்போது மது போதையில் குண்டு வைக்கப் போகிறேன், நாட்டையே தகர்க்கப் போகிறேன் என கூறிக் கொண்டிருப்பார். இந்நிலையில் மதுபோதையில் முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார், என்றனர்.

Advertisement