காளிப்பட்டி கந்தசாமி கோவில் தைப்பூச தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்


மல்லசமுத்திரம்: காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், தைப்பூச தேர்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச நாளன்று, தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வேண்டுதல்கள் வைத்து இத்தேரை இழுத்து வழிபாடு
செய்வர்.அதன்படி, இந்தாண்டு வரும் பிப்., 1ல் தைப்பூச நாளன்று, மாலை, 3:00 மணிக்கு ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் வெகுவிமரிசையாக, பக்தர்கள்
புடைசூழ திருத்தேர் கோவிலை சுற்றி வலம் வரும். அதையொட்டி, நேற்று மதியம், 1:00 மணிக்கு கொடியேற்ற அபிஷேகம் நடந்தது. மாலை, 7:00 மணிக்கு பருத்திப்பள்ளிநாடு செங்குந்த முதலியார்கள் அளித்த கொடிசேலை மூலம் கொடியேற்றம் துவங்கியது. தொடர்ந்து, கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அரோகரா கோசம் முழங்க வழிபாடு செய்தனர்.



மொத்தம், 8 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், திருவிழா காலத்தில் தினமும் மதியம், 1:00 மணிக்கு சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து,
சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதேபோல், தினமும் இரவு, 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் சுவாமி திருவீதி உலா சிறப்பாக நடைபெறும். திருக்கோவிலில் அமைந்துள்ள பூஜாரி லட்சுமணகவுண்டர் நினைவு கலையரங்கத்தில், தினசரி கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு தரிசன வசதி மற்றும் சிறப்பு பேருந்துகள் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை, செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் பரம்பரை அறங்காவலர் செல்வகுமார் ஆகியோர் செய்துள்ளனர்.

Advertisement