மும்பை அணிக்கு 5வது தோல்வி: 'எலிமினேட்டர்' போட்டிக்கு குஜராத் தகுதி

வதோதரா: பெண்கள் பிரிமியர் லீக் போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்திய குஜராத் அணி 'எலிமினேட்டர்' போட்டிக்கு தகுதி பெற்றது.

வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நடந்த பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் மும்பை, குஜராத் அணிகள் மோதின.

'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த குஜராத் அணிக்கு பெத் மூனே (3) ஏமாற்றினார். சோபி டெவின் (25), அனுஷ்கா சர்மா (33) ஓரளவு கைகொடுத்தனர். பின் இணைந்த கேப்டன் ஆஷ்லே கார்ட்னர், ஜார்ஜியா வேர்ஹாம் ஜோடி கைகொடுத்தது. அமன்ஜோத் கவுர் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய வேர்ஹாம், அமெலியா கெர் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். மறுமுனையில் அசத்திய ஆஷ்லே கார்ட்னர், ஹேலி மாத்யூஸ் வீசிய 16வது ஓவரில், ஒரு சிக்சர், 'ஹாட்ரிக்' பவுண்டரி உட்பட 19 ரன் விளாசினார்.

ஷப்னிம் வீசிய 17வது ஓவரில் கார்ட்னர், வேர்ஹாம் தலா 2 பவுண்டரி விளாச 17 ரன் கிடைத்தன. நான்காவது விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்த போது அமெலியா கெர் பந்தில் கார்ட்னர் (46) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய வேர்ஹாம், நாட் சிவர்-புருன்ட் வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார்.

குஜராத் அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 167 ரன் எடுத்தது. வேர்ஹாம் (44), பாரதி புல்மாலி (5) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை அணி சார்பில் அமெலியா கெர் 2 விக்கெட் வீழ்த்தினார்.


எட்டக்கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு சஜனா (26) நல்ல துவக்கம் தந்தார். அமெலியா கெர் (20), அமன்ஜோத் கவுர் (13) ஆறுதல் தந்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், அரைசதம் கடந்தார்.

மும்பை அணி 20 ஓவரில் 156/7 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஹர்மன்பிரீத் (82) அவுட்டாகாமல் இருந்தார். பிரிமியர் கிரிக்கெட் வரலாற்றில் குஜராத் அணி, முதன்முறையாக மும்பை அணியை வென்றது.

Advertisement