பைனலில் ஜோகோவிச்-அல்காரஸ்: ஆஸி., ஓபனில் முன்னேற்றம்
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பைனலுக்கு செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயினின் அல்காரஸ் முன்னேறினர்.
மெல்போர்னில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகின் 'நம்பர்-1' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 22, 'நம்பர்-3' வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 28, மோதினர். முதலிரண்டு செட்களை அல்காரஸ் 6-4, 7-6 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட ஸ்வெரேவ், 'டை பிரேக்கர்' வரை சென்ற அடுத்த இரு செட்களை 7-6, 7-6 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் அசத்திய அல்காரஸ் 7-5 என போராடி வென்றார்.
ஐந்து மணி நேரம், 27 நிமிடம் நீடித்த போட்டியில், தசை பிடிப்பு, காயத்தை பொருட்படுத்தால் விளையாடிய அல்காரஸ் 6-4, 7-6, 6-7, 6-7, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக பைனலுக்குள் நுழைந்தார். இதற்கு முன், இரு முறை (2024, 2025) காலிறுதி வரை சென்றிருந்தார். இதன்மூலம் நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடரிலும் பைனலுக்கு முன்னேறிய இளம் வீரரானார் (22 வயது) அல்காரஸ்.
ஜோகோவிச் அபாரம்: மற்றொரு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-2' இத்தாலியின் ஜானிக் சின்னர் 24, 'நம்பர்-4' வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 38, மோதினர். முதல் செட்டை 'நடப்பு சாம்பியன்' சின்னர் 6-3 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட ஜோகோவிச் 2வது செட்டை 6-3 என தன்வசப்படுத்தினார். மூன்றாவது செட்டை சின்னர் 6-4 என வென்றார். பின், 4வது செட்டை ஜோகோவிச் 6-4 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் மீண்டும் அசத்திய ஜோகோவிச் 6-4 என வென்றார்.
நான்கு மணி நேரம், 9 நிமிடம் நீடித்த போட்டியில் ஜோகோவிச் 3-6, 6-3, 4-6, 6-4, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 11வது முறையாக (2008, 2011-13, 2015-16, 2019-21, 2023) பைனலுக்கு முன்னேறினார். நாளை நடக்கவுள்ள பைனலில் ஜோகோவிச், அல்காரஸ் மோதுகின்றனர்.
கோப்பை வெல்வாரா சபலென்கா
பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா 27, 'நம்பர்-5' வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 26, மோதுகின்றனர். தொடர்ந்து 4வது முறையாக பைனலுக்கு முன்னேறிய சபலென்கா, இரண்டு முறை (2023, 2024) கோப்பை வென்றுள்ளார். பைனலில் அசத்தினால் தனது 3வது பட்டத்தை கைப்பற்றலாம்.
இரண்டாவது முறையாக (2023, 2026) பைனலுக்குள் நுழைந்த ரிபாகினா, 2023ல் சபலென்காவிடம் தோல்வியடைந்தார். இதற்கு பதிலடி கொடுத்தால் இத்தொடரில் தனது முதல் பட்டத்தை வெல்லலாம்.
டபிள்யு.டி.ஏ., ஒற்றையரில் இருவரும் 14 முறை மோதினர். இதில் சபலென்கா 8, ரிபாகினா 6ல் வென்றனர். கடைசியாக, கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் நடந்த டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் தொடருக்கான பைனலில் ரிபாகினா, சபலென்காவை வீழ்த்தினார்.
மேலும்
-
எங்களுக்கும் திருப்பி அடிக்க தெரியும்: தி.மு.க.,வுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
-
நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில் 7,500 படுகொலைகள்: அன்புமணி ஆவேசம்
-
தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய முடியாது: சுப்பிரமணியன்
-
அய்யப்பன் கோவில் தங்க கவசத்தை வீட்டில் வைத்து பூஜை செய்த நடிகர்
-
இதே நாளில் அன்று
-
எந்த வகையில் நியாயம்?