சொந்த மண்ணில் சாதிப்பாரா சாம்சன்: இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு
திருவனந்தபுரம்: ஐந்தாவது 'டி-20' போட்டியில் உள்ளூர் 'ஹீரோ' சஞ்சு சாம்சன் விளாசினால், இந்திய அணி சுலப வெற்றி பெற்று, தொடரை 4-1 என கைப்பற்றலாம்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட 'டி--20' தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று சவாலில் வென்ற இந்தியா, தொடரை கைப்பற்றியது. நான்காவது போட்டியில் தோற்றது. இன்று ஐந்தாவது போட்டி, கேரளாவின் திருவனந்தபுரம், கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நடக்க உள்ளது.
ஆட்ட நுணுக்கம்: இந்திய அணியின் 'பேட்டிங்' மூவரை அதிகம் சார்ந்துள்ளது. கடந்த போட்டியில் அபிஷேக் (0), கேப்டன் சூர்யகுமார் (8), இஷான் கிஷான் (கணுக்கால் காயம்) கைகொடுக்காத நிலையில், கரை சேர முடியவில்லை. இன்று இவர்கள் விளாச வேண்டும். துவக்க வீரர் சஞ்சு சாம்சன் மீது அனைவரது பார்வையும் உள்ளது. இத்தொடரில், 4 போட்டியில் 40 ரன் (10, 6, 0, 24, சராசரி 10.00 ) தான் எடுத்துள்ளார். இவரது ஆட்ட நுணுக்கத்தில் குறை காணப்படுகிறது. சரியான 'புட்வொர்க்' இல்லாததது. பேட்டை தாமதமாக சுழற்றுவது போன்ற தவறுகளால் தடுமாறுகிறார். கேரளாவை சேர்ந்த இவர், இன்று தனது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் அசத்த வேண்டும். நேற்று 30 நிமிடங்களுக்கு மேல் பயிற்சியில் ஈடுபட்டார். அக்சர் படேல், உள்ளூர் வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொண்டார். வரும் பிப்.7ல் துவங்க உள்ள 'டி-20' உலக கோப்பைக்கு முன் சாம்சன் திறமை நிரூபிப்பது அவசியம்.
வருகிறார் வருண்: 'மிடில் ஆர்டரில்' ஷிவம் துபே நம்பிக்கை தருகிறார். ரிங்கு சிங் 'பினிஷராக' வருவதே நல்லது. காயத்தில் இருந்து மீண்ட இஷான், 'ஆல்-ரவுண்டர்' அக்சர் படேல் களமிறங்க வாய்ப்பு உள்ளது. கடந்த போட்டியில் இந்தியா பந்துவீச்சில் சோதனை முயற்சி மேற்கொண்டது. ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. இன்று சூழ்நிலைக்கு ஏற்ப, இவர்களையும் பயன்படுத்த வேண்டும். கடந்த இரு போட்டியில் 'ரெஸ்ட்' கொடுக்கப்பட்ட 'சுழல் மாயாவி' வருண் சக்ரவர்த்தி அணிக்கு திரும்பலாம். இவருக்கு பலம் சேர்க்க குல்தீப் யாதவ், பிஷ்னோய் உள்ளனர். 'வேகத்தில்' பும்ரா, அர்ஷ்தீப், ஹர்ஷித் ராணா கைகொடுக்கலாம்.
துவக்கம் பலம்: நியூசிலாந்து அணி கடந்த போட்டியில் வென்ற நம்பிக்கையில் உள்ளது. கான்வே, செய்பர்ட் வலுவான துவக்கம் தருவது பலம். ரச்சின் ரவிந்திரா, கிளன் பிலிப்ஸ் ரன் சேர்க்கலாம். 'சுழல்' ஜாலத்திற்கு கேப்டன் சான்ட்னர் உள்ளார். 'வேகப்புயல்' பெர்குசன் இடம் பெறலாம்.
மழை வருமா
இரு அணிகளும் 29 'டி-20' போட்டியில் மோதின. இந்தியா 17, நியூசிலாந்து 11ல் வென்றன. ஒரு போட்டி 'டை' ஆனது.
* திருவனந்தபுரம், கிரீன்பீல்டு மைதான ஆடுகளம் பேட்டர்களின் சொர்க்கபுரி. இரவு நேர பனிப்பொழிவு பவுலர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.
* இங்கு ஏற்கனவே நடந்த 4 'டி-20' போட்டியில் இந்தியா 3ல் வென்றது. இதில் நியூசிலாந்துக்கு எதிராக 2017ல் வென்றது.
* இன்று திருவனந்தபுரத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை.
மீண்டு வருவார் சாம்சன்
''இந்திய அணியின் சீனியர் வீரர் சாம்சன், 31. கடந்த 4 போட்டியில் அதிக ரன் எடுக்கவில்லை. தொடர்ந்து 5 இன்னிங்சில் ரன் குவிப்பதும் அடுத்த சில இன்னிங்சில் சறுக்குவதும் கிரிக்கெட்டில் சகஜம். சாம்சன் திறமை பற்றி தெரியும். மனதளவில் இவர் வலிமையாக இருக்க உதவுவதே எங்களது பணி. விரைவில் அசத்துவார். இன்றைய போட்டியில் இஷான் கிஷான் இடம் பெற அதிக வாய்ப்பு உண்டு.
-சிதான்ஷு கோடக்இந்திய பேட்டிங் பயிற்சியாளர்
அண்ணன் வரார் வழிவிடுங்க...
ஐந்தாவது 'டி-20' போட்டியில் பங்கேற்க இந்திய அணியினர் திருவனந்தபுரம் வந்தனர். விமான நிலையத்தில் உள்ளூர் நாயகன் சாம்சனை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். சிலர் 'போட்டோ' எடுக்க முயன்றனர். உடனே பாதுகாவலர் போல மாறிய கேப்டன் சூர்யகுமார்,''சேட்டனை (மலையாளத்தில் அண்ணன்) யாரும் தொந்தரவு செய்யாதீர்கள். அவருக்கு வழி விடுங்கள்,'' என ஜாலியாக கூறினார்.
மேலும்
-
எங்களுக்கும் திருப்பி அடிக்க தெரியும்: தி.மு.க.,வுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
-
நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில் 7,500 படுகொலைகள்: அன்புமணி ஆவேசம்
-
தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய முடியாது: சுப்பிரமணியன்
-
அய்யப்பன் கோவில் தங்க கவசத்தை வீட்டில் வைத்து பூஜை செய்த நடிகர்
-
இதே நாளில் அன்று
-
எந்த வகையில் நியாயம்?