திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம்: சில நாட்களில் முடிந்து விடும்; அண்ணாமலை

33


சென்னை: திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம், இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என்ற ஒரே நம்பிக்கைதான், தமிழக மக்களுக்கு தற்போது நிம்மதி அளிக்கும் ஒரே விஷயம் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: சென்னை அரசு கலைக்கல்லூரியில், கேண்டீனில் பணிபுரியும் 22 வயது இளம்பெண், மூன்று நபர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. கல்வி நிலையங்களில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, மிகவும் அச்சத்தை அளிக்கிறது.


முதல்வர் ஸ்டாலின் மேடையேறி, தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது என்று எத்தனை பொய்கள் சொன்னாலும், உண்மை நிலை முற்றிலும் மாறாக இருக்கிறது என்பதை, தினமும் நாம் காணும் இது போன்ற செய்திகள் நிரூபிக்கின்றன.

பாலியல் குற்றங்கள்




முதலில், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்ற கடினமான உண்மையை திமுக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அதற்கேற்ற நடவடிக்கைகளை திட்டமிட முடியும். அதை விடுத்து, ஒரு மாய உலகத்தில் அமர்ந்து கொண்டு, யாரோ எழுதிக் கொடுப்பதை அப்படியே ஒப்பித்துச் செல்வதல்ல முதல்வரின் பணி.


கட்டுக்கடங்காத போதைப் பொருள்கள் புழக்கம், சமூகத்தில் மிகப் பெரிய அவலத்தை ஏற்படுத்தியிருப்பது, பெருகி வரும் பாலியல் குற்றங்களால் வெளிப்படையாகியிருக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என, திமுக அரசின் கையாலாகாத்தனம், அமைதியான நம் தமிழகத்தை முற்றிலுமாக சிதைத்திருக்கிறது.

இருண்ட காலம்




குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால்தான், மேலும் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். ஆனால், தமிழகத்தில் மட்டும்தான், குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திமுக அமைச்சர்களுடன் கட்டிப்பிடித்தபடி போட்டோ எடுத்துக் கொள்ளும் இழிநிலை இருக்கிறது. அந்தக் குற்றவாளிகளைக் காப்பாற்ற, எந்த எல்லைக்கும் செல்கிறது திமுக அரசு.


பிறகு எப்படி குற்றம் செய்பவர்களுக்குப் பயம் வரும்? சாதாரண பொதுமக்களுக்குத்தான் பயம் வருகிறது. திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம், இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என்ற ஒரே நம்பிக்கைதான், தமிழக மக்களுக்கு தற்போது நிம்மதி அளிக்கும் ஒரே விஷயம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement